15/09/2018

மறைக்கப்பட்ட ஒரு தமிழ் மாவீரனின் கதை இது...


டச்சுபடையை வென்ற முதல் தமிழன்,
முதல் சுதந்திர போராட்ட மாவீரன்,
வீர தளபதி, அனந்த பத்மநாபன் நாடார்...

சேரத்தமிழ் நாட்டில் (வேணாடு) தென் திருவிதாங்கூரில் கல்குளம் வட்டம் வியன்னூர் கிராமம் கண்ணனூர் தேசம் தச்சன்விளை என்னும் ஊரில் வாழ்ந்து வந்தவர் ஆசான் தாணுமாலைய நாடார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளவாயாகவும், போர்ப்பயிற்சி அளிக்கும் கல்விக் கூடமான களரிகள் நூற்றி எட்டுக்கும் ஆயுதக் கிட்டங்கிகளுக்கும், பொறுப்பாளராகவும் திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார்.

வர்மக்கலை ஆசானாக விளங்கிய அவருக்கு மகனாக அனந்தபத்மநாபன்
கி பி 1698 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தச்சன்விளையில் பிறந்தார். இளம் வயதிலேயே வாள் வீச்சு, ஈட்டி எறிதல்,சிலம்பம், வர்மம் போன்ற போர் கலைகளில் சிறந்து விளங்கினார். இளமையிலேயே போர்ப்பயிற்சி ஆசிரியராகவும் வர்மக்கலை ஆசானாகவும் இருந்தான்.

தந்தை தாணுமாலைய நாடார் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். தந்தையின் அரண்மனைப் பொறுப்புகள் அனைத்தும் அனந்த பத்மநாப நாடாரின் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டன.
சாளுக்கிய சோழர்களும் பலநூறு ஆண்டுகளாக சேரத்தமிழ் நாட்டின் மீது படையெடுத்து, மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

1672ஆம் ஆண்டு ஆதித்ய வர்மாவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் திருவிதாங்கூரையும் கோவில்களையும் மொகலாயப் படைகள் தாக்கின. ஆதித்யவர்மா கொல்லப்படவே 1721-ல் ராமவர்மா அரியணையில் ஏறினார். 1706ல் பிறந்த மார்த்தாண்ட வர்மா சிறுவயது முதலே திருப்பாப்பூர் அரண்மலையிலிருந்தபடி ஆட்சியைக் கவனித்து வந்தார்.

1728ல் மன்னர் ராமவர்மா காலமானதும் மருமக்கள் தாய்வழியில் இளவரசர் மார்த்தாண்ட வர்மா முடிசூட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரைக் கொல்லவும் சதிகள் திட்டமிடப்பட்டதால், அனந்தபத்மநாபனின் களரிகளில் இளவரசர் ஒளிந்து மறைந்து வாழ்ந்தார். அங்கேயே போர்ப்பயிற்சிகளும் பெற்றுத் தீரனானார். நாயர்களின் சதிச் செயல்கள் மற்றும் பலவித இடர்ப்பாடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு அனைத்தையும் அனந்தபத்மநாபநாடார் துணையுடன் வென்றார்.

கி.பி1729ல் மார்த்தாண்டவர்மா திருவாங்கூர் மன்னரானார்.
மன்னரான பின்னரும் பல சதிகளுக்கு ஆட்பட்டு, அளவில்லாத இடையூறுகளுக்கு உள்ளானார். அத்தனைக்கும் தன்னுடனேயே இருந்து ஊண் உறக்கமின்றி, இராப்பகல் கண் துஞ்சாது வீரத்துடன் செயலாற்றி உதவிகரமாக இருந்தார். படைதளபதி அனந்தபத்மநாபநாடார்.

கி.பி.1741ல் நடைபெற்ற குளச்சல் போரில் பீரங்கிகளுடன் போரிடவந்த டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து போரிட்டு டச்சுப்படைத் தளபதி டிலனாயைக் கைது செய்தார்.

இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டமாகும்.

டச்சுப் படை தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டிலனாயைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் ஒப்படைத்தார்.

இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.

மேலும் கிழக்கிந்திய கம்பனியின் நேரடி வர்த்தகத்தை வேணாட்டில் அனுமதிக்காததால் சினம் கொண்ட ஆங்கிலேயர்களிடம். நாங்கள் யுத்தத்தை ஐரோப்பாவில் வைத்துக்கொள்ள தயார் என கர்ச்சித்தார். இதனால் ஆங்கிலேயர்களும் அவரது சரித்திரத்தை மறைத்தார்கள்.

1750ஆம் ஆண்டு ஆவணி 28அம் நாள் மயக்க மருந்து கலந்த விருந்து அளிக்கப்பட்டதால் மயக்கமானார் அனந்தபத்மநாபன். சதிகாரர்கள் வெட்டிக் கொல்ல முயன்றும் தப்பித்துக் குதிரையில் படுத்தபடியே சொந்த ஊருக்குச் சென்றார். வீட்டுவாசல் வரை சென்ற அவரின் உடல் அப்போது சரிந்த வீழ்ந்தது. பின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது. இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.

குளச்சல் சண்டையில் வெற்றி பெற்றதற்காக அனந்த பத்மநாப நாடாரை பாராட்டி மன்னன் மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கினார். மேலும் அவர் பெயரில் பல நினைவிடங்களையும், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரையும் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயர் இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டப்பட்டது. தற்போதைய திருவனந்தபுரம் முன்பு அனந்தன்புரம் என்று தான் இருந்தது.

டச்சுபடையை வென்ற முதல் தமிழன்
வீர தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் அவர்களின் புகழ் காலத்தால் மறைக்கமுடியாதது.

தமிழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி மாவீரனின் புகழை கொண்டாடுகின்றன.

தமிழர்களின் முக்கியமான வேண்டுகோள் டச்சுபடையை வென்ற முதல் தமிழன், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன், வீர தளபதி, அனந்த பத்மநாபன் நாடார் அவர்கள் பிறந்த தச்சன்விளையில் மணிமண்டபம், மற்றும் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை..

இந்த வருடம்
மாவீரனின் 268 வது
வீரவணக்க நாள்..

நாள் : 13.09.2018

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.