18/09/2018

புது மாப்பிள்ளைக்கு பெட்ரோலை பரிசாக அளித்த நண்பர்கள்...


பெட்ரோல் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் திருமண தம்பதியினருக்கு பெட்ரோலை பரிசளித்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவருக்கும் நாகை மாவட்டம் செம்பியவேலன்குடி கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆசிரியை கனிமொழிக்கும் நேற்று குமராட்சியில் உள்ள அன்னை கோகிலாம்பாள் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் மண மக்களுக்கு பல்வேறு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போழுது மாப்பிள்ளை இளஞ்செழியனின் சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஒருங்கிணைந்து 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி அதனை கேனோடு மணமேடையில் இருந்த மணமக்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.

திருமண தம்பதிக்கு பெட்ரோல் கேனை பரிசளித்த பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள் குழம்பினார்கள். தம்பதிகளும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்துள்ளனர். இதனைப் பார்த்த பரிசளித்த நண்பர்கள் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி வரும் நிலையில் பரிசு பொருளாக பெட்ரோல் கொடுத்தால் புது மண தம்பதிகளுக்கு  உபயோகமாக இருக்கும் எனக் கொடுத்தோம் என கூறியுள்ளனர். இதனை கேட்ட திருமண தம்பதிகள் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் சிரித்தனர்.  இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் பெட்ரோல் விலை குறித்தும், அதனை பரிசாக வழங்கியது  குறித்தும் பரவலாகப் பேசினார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.