29/11/2018

மேகேதாட்டு அணைக்கு ஒப்புதல் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் பாஜக...


காவிரி நதியின் மீது மேகேதாட்டுப் பள்ளத்தாக்கில் 66.5 டி,எம்.சி. தண்ணீர் தேக்கும் அணையை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு இந்திய ஒன்றிய அரசின் நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது காவிரியின் மீதான தமிழ்நாட்டின் உரிமைக்கு உலை வைக்கும், காவிரிப் படுகையை பாலையாக்கும் திட்டமிட்டச் சதியாகும்.

பெங்களூரு நகர் மட்டுமின்றி, மைசூரூ, மாண்டியா மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காகவே மேகேதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்தை தீட்டியிருப்பதாக கர்நாடக அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பிலுள்ள நீர் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மைய நீர்வள ஆணையம் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட நதியென்பதையும், அதன் மீது கூடுதலாக ஒரு அணைக் கட்ட ஒப்புதல் வழங்குவது காவிரி நதி நீர்த் தகராறு தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கும் அதன் மீது இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிற்கும் எதிரான என்று தெரிந்தும் சாத்தியக்கூறு (Pre-feasibility Report) அறிக்கைக்கு ஒப்புதல் தந்தது மட்டுமின்றி, அணைக் கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது என்றால் இது எவ்வளவு பெரிய சதி என்பதை தமிழர்கள் மட்டுமல்ல, இதர மாநில மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேகேதாட்டு அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்குள் காவிரி ஆறு அடியெடுத்து வைக்கும் பகுதிக்குச் சற்று மேலுள்ள பள்ளத்தாக்கில் கட்டப்படுவது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். காவிரியுடன் அர்க்காவதி நதி இணைந்து பெருக்கெடுக்கும் இடத்தில் மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அது தமிழ்நாட்டிற்கு எதிரான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிடத் திட்டமிட்டுள்ளது.

ஒன்று, கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழே கபினி (ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள) அணை உள்ளது. 19.5 டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்ட இந்த அணை நிரம்பியவுடன் உபரி நீர் அனைத்தும் காவிரிக்கு வந்துவிடும். அதேபோல் அர்க்காவதி காவிரியுடன் இணைவதால் மழை பொழிவுக் காலங்களில் காவிரியில் நீர்ப் பெருக்கு ஏற்படுகிறது. இது அப்படியே தமிழ்நாட்டிற்கு வந்தடைவதால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்புவதற்கு முன்னரே மேட்டூருக்கு நீர் வரத்து கிடைக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இரண்டு, மேகேதாட்டு அணையை இருப்பு அணை (Balance Reservoir) என்றே கர்நாடக அரசு கூறுகிறது. இதன் பொருள் கபினி, அர்க்காவதி உபரி நீரை சேமித்து வைக்கும் அணை என்பதே. இதனை தமிழ்நாட்டிற்கு செல்வதை விரும்பாத கர்நாடகம், அதனைத் தடுத்து மேகேதாட்டு அணையைக் கட்டி அங்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற நீண்ட காலமாகவே திட்டமிட்டுள்ளது. இதற்கு கால்கோள் இட்ட புண்ணியவான இந்நாட்டின் பிரதமராக இரண்டு தமிழர்களால் தூக்கி உட்கார வைக்கப்பட்ட தேவே கவுடா ஆவார். ஆனால் இப்போது பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களின் குடி நீர்த் தேவையை நிறைவு செய்வதற்கு என்று நீர் வள அமைச்சகத்திடன் கோரிக்கை வைத்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மின்சாரம் தயாரிக்க மைய மின் சக்தி ஆணையத்திடமும், சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகத்திடமும் திட்ட வரையறையை கர்நாடக அரசு அனுப்பியுள்ளது.

இதெல்லாம் இந்திய ஒன்றிய அரசின் நீர் வள அமைச்சருக்குத் தெரியாதா? இந்திய உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி இந்த அணைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று தெரியாதா? காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் மேகேதாட்டு அணைத் திட்டத்தை தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி நிறைவேற்ற முடியாது என்றும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் ஆணையத்தின் கூட்டத்தில் இதுபற்றிப் பேசப்படும் என்று அறிவித்துள்ளாரே! இது எப்படி? காவிரி ஆணையத்தின் தலைவருக்கு தெரிந்தது அவர் பணியாற்றிவரும் மைய நீர் வள ஆணையத்திற்குத் தெரியாதா?

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீரை உறுதியாக வழங்கவே (!) மேகேதாட்டுவில் அணைக்கட்டப்போதாக முதல்வர் குமாரசாமி கூறுவது வேடிக்கையின் உச்சம். அந்த அளவு தண்ணீருக்கும் அதிகமான உரிமை உடையது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 3 மாநிலங்கள் என்பது குமாரசாமிக்குத் தெரியுமா? காவிரிப் படுகையில் பெய்யும் மழையின் 50 விழுக்காடு உறுதித் தன்மையின் அடிப்படையில்தான் இந்த 177.25 டி.எம்.சி. கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைவிட அதிகம் மழை பெய்தால் கூடுதல் தண்ணீரைப் பெற அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, தமிழ்நாடு இந்த விடயத்தில் கேள்வி எழுப்ப முடியாது என்று கர்நாடக அமைச்சர் சிவகுமார் கூறுவது சட்டப் பூர்வமாக ஏற்கத்தக்கதல்ல.

கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபரில் பிரதமரை நேரில் சந்தித்தபோது அளித்த மனுவிலும் எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். அப்படியிருந்தும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றால் தமிழ்நாட்டை மோடி அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்றுதானே அர்த்தம்?

இவ்வளவு அப்பட்டமாக மோடி – நிதின் கட்கரி தலைமை செயல்படுவதன் நோக்கம், காவிரிப் படுகை விவசாயத்தை முற்றிலுமாக அழிப்பதே. அப்போதுதானே அவர்களால் ஹைட்ரோகார்ப்ன் திட்டங்களை நிலத்திலும் கடலிலும் நிறைவேற்றிட முடியும்? தமிழன் தண்ணீர் கேட்டால் கோதாவரி நதியில் இருந்து 3,000 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம் என்று அமைச்சர் கட்கரி கூறுவார். அதனை வழிமொழியத்தான் தமிழக பாஜக கட்சி இருக்கிறதே.

கஜா புயலால் காவிரிப் படுகை வாழ் மக்கள் 45 இலட்சம் பேர் இன்றைக்கு வாழ்வாதாரம் இழந்து அல்லுறும் நிலையில், அதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போட முன்வராத இந்திய அரசு, வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல் காவிரியில் கிடைத்த நீதியையும் குழி தோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபடுகிறது, திசைதிருப்புகிறது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் உணர்வு பெற வேண்டும், நம்முடைய உரிமையை நிலைநாட்டும் அரசியலை உருவாக்க வேண்டும். அதுவே காவிரியில் மட்டுமல்ல இந்நாட்டில் நமது உரிமைகள் அனைத்தையும் முழுமையாய் நிலைநாட்ட அது ஒன்றே ஒரே வழியாகும்.

இன்று மோடி அரசு, நாளை எந்த அரசு வந்தாலும் நம்முடைய பலமின்றி நமது அரசியல் உரிமையை காத்துக்கொள்ள முடியாது, முடியவே முடியாது.

கா.ஐயநாதன்.
சென்னை, நவம்பர் 28, 2018...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.