29/11/2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்...


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுநர் அறிக்கை தாக்கல் செய்தது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். புத்தாண்டில் ஆலை திறப்பது உறுதி. உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஆலையைத் திறக்கமுடியாது எனக் கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டாரகள். என பா.ம.க. தலைவர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலுயுறுத்தி மக்களின் தொடர் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22ல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மே-28 ல் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பு. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மேகாலயா மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான இருவர் கொண்ட குழுவை நியமித்தது தீர்ப்பாயம். இக்குழு கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட இடம், ஆலையினுள் உள்ள யூனிட்டுகள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வினை மேற்கொண்டதுடன் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தியது.

இது குறித்த ஆய்வறிக்கை  48 தனித்தனி சீலிடப்பட்ட உறைகளில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி கோயல் தலைமையில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலை மூடியது தவறான முடிவு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு கூறிய காரணங்கள் ஏற்கும் படியாக இல்லை. ஆலை மூடப்படுவதற்கு முன்பு ஆலைத்தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுநர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்திற்கே சென்றாலும் ஆலையைத் திறக்கமுடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர் எனத் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.