03/11/2018

தமிழ்நாட்டின் தலைசிறந்த கோட்டை...


செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது ஒன்றியம் (Union) பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.

மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் கிழக்கின் ட்ரோய் என்றனர்.

முகலாயர்களால் பாதுசாபாத் என்றும் , சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.

பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது.

அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.

இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு சை(ஜை)னர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது.

இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது.

மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .

செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.

871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர்.

அவன் தம்பி ராசராசன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது.

1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விசயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர்.

13 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

குறிப்பாக, விசயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமை இடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது.

மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீச(ஜ)ப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின.

இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாசி இதனை மேலும் பலப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாசியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராசாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான்.

முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை.

இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராசாராம் அங்கிருந்து தப்பி விட்டான்.

பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது.

அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

எனினும் சிறிதுகாலம் இதனை கை(ஹை)தர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தார்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.