30/12/2018

புலிக்கொடி சொல்லும் செய்தி...


1977 ஆம் ஆண்டு.. அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில் தான் தங்கியிருந்தார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது..

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு
வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்க வேண்டும் என்பது ஈழப் போராளிகளின் யோசனை..

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்க வேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.
அதென்ன 33?

1977+33=2010

அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு..

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள்.

பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.

சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.

எனவே மீன் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.

சோழர்கள் என்றால் தான் அலறுவார்கள்.

எனவே தான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.

இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ் தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியது தான்.

புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள்.

எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது.

அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.தமிழகக் காடுகளில் தான் உண்டு.

அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம்.

இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.

புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.

(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)

சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச் சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தர வேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்ற வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.

தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக் கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.

ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.

அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.

துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.

புலி நடுவில் எதிர்பார்த்ததை விட பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.