30/12/2018

பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை. அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக் கொள்வர்.

பசுவானது கிடைக்கும் போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அது அந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாது. ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக்கொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.