08/05/2017

அட்சய திருதியையில் தங்கம் வாங்க வேணடுமா..?


அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கும் நாளாகத் தான் மக்கள் நினைக்கிறார்கள்...

அன்றைய தினம் நகைக் கடைகளில் குவியும் கூட்டத்தை பார்த்தாலே மக்களின் நம்பிக்கை தெரிகிறது..

அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்குமாம்.

செல்வம் கொழிக்குதோ இல்லையோ, ஆண்களின் விழி பிதுங்குவது உண்மை.

மனைவியன் நச்சரிப்பு தாங்காமல் அங்கே, இங்கே கடன் வாங்கி சங்கடத்தில் தவிக்கும் ஆண்களே.....

இந்த விஷயத்தை முதலில் படியுங்கள்.. வீட்டம்மாவுக்கும் படித்துக் காட்டுங்கள்...

அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று எந்த புராணமும் சொல்லவில்லை.

ஆனால், இந்த நாளில் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று தான் புராணங்கள் சொல்கின்றன...

தானம் தர்மங்கள்...

அட்சய திருதியை திருநாளில் தான தர்மம் செய்தால் அது பெரிய விஷயமாக அமைந்து, நம் பாவ - புண்ணிய கணக்கில் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் கூடுதலாக சேரும்..

நம் புண்ணிய கணக்கு வளர்ந்தாலே எல்லா செல்வங்களும் நம்மை தேடி வரும். தேடி வரும் செல்வங்கள் எப்போதும் நிலைத்து இருக்கும்.

இதைத் தான் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மாற்றி விட்டார்கள்..

ஆனால், அன்றைய தினம் தங்கம் வாங்கக்கூடாது என்று எந்த சாஸ்திரமும், புராணமும் கூறவில்லை...

என்ன வாங்க வேண்டும்?

அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்குகிறோமோ இல்லையோ,  சர்க்கரை அல்லது உப்பு, இரண்டில் ஒன்றை கண்டிப்பாக வாங்க வேண்டும்.


சர்க்கரை வாங்கினால் இன்னும் நல்லது. சர்க்கரை எப்படி இனிக்கிறதோ அப்படி நம் வாழ்க்கையும் இனிக்கும்.

அரிசியும் வாங்க வேண்டும். அப்போது தான் நம் வீட்டில் தானியங்கள் நிறைந்திருக்கும். பற்றாக்குறை இருக்காது.

அட்சயம் என்றால் என்ன?

அட்சயம் என்றால் வளருவது என்று பொருள்.

இந்த நாளில் நாம் செய்யும் தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் புண்ணியம் பெருகும் என்பது தான் உண்மையான கருத்து..

அதற்கு தான் அள்ள அள்ள குறையாத பாத்திரத்துக்கு அட்சயப் பாத்திரம் என்று கூறப்பட்டுள்ளது.

பாண்டவர்கள் காட்டில் அஞ்ஞான வாசம் செய்த போது, பாஞ்சாலி சூரிய பகவானை வேண்டி பெற்ற  அட்சயப் பாத்திரம் மூலமாக, தங்களை தேடி வந்த எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாமல் உணவை வாரி வாரி வழங்கினர்..

பாண்டவர்களின் இந்த புண்ணியம் தான் மகாபாரத போரில் அவர்களின் தலையை காத்தது.


மகாலட்சுமி பூஜை...

செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் நிலைத்து நிற்க அட்சய திருதியை அன்று மகாலட்சுமிக்கு பூஜை செய்வார். இதனால் மகிழ்ச்சி அடையும் லட்சுமி,  குபேரன் என்றும் செல்வந்தராக இருக்க ஆசி வழங்குவார்.

இந்த அட்சய திருதியை அன்று நாமும் மகாலட்சுமிக்கு பூஜை செய்தால் நிச்சயம் லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும்.

தானமே சிறந்தது...

அட்சய திருத்திகை நாளன்று கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்.

தானம் செய்யாமல் தங்கத்தை வாங்கி பீரோவில் பூட்டினால் நம் வீட்டில் வளம் பெருகாது..

இந்த நாளில் கடன் வாங்கி தங்கம் வாங்கினால், செல்வம் பெருகாது, கடன் தான் பெருகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.