08/05/2017

கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்...


சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்...

தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம்.

ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று  தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது.

ஒவ்வொரு ஆண்டும்  இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான்  ஒரு நாள் மட்டும் கண்ணகி சித்திரைப் பெருவிழா அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்தம் என்று தெரிவிப்பதற்காகவும், இதில் தமிழர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை உணர்த்துவதற்காகவும் தமிழர்களை மிகக் கேவலமாக நடத்துகின்றனர்.

உண்மையில் தமிழ் நாட்டிற்குச் சொந்தமானதே  கண்ணகி கோயிலாகும். தமிழர்களின் வழிபாட்டுமரபுகளில் தொன்மையானது கண்ணகி வழிபாடாகும். நம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழீழ நாட்டில் கண்ணகி வழிபாடு இன்றும் உள்ளது.

இதற்கு சான்று உரைக்கும் ஆவணமாக ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் விளங்குகிறது.

அதன் வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்..

 மங்கலமடந்தை கோட்டத் தாங்கண் வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்

என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும், மங்கலா தேவி என்பது கண்ணகியை குறிக்கும் சொல்லாகும் என்று 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் குறிப்பிடுகிறார்.  'மங்கல மடந்தை' என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படும் கண்ணகிக்கு கோயில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன். அவன் வடபுலம் சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலையெடுத்து வழிபட்ட கோயிலும் இதுவேயாகும்.

இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இக்கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்று பல சான்றுகள் தந்துள்ளனர்.

இவற்றில் முதலாம் இராசராச சோழன் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்ம குலசேகரன் கல்வெட்டு ஒன்றும்  முதன்மையானது. மேலும், ஒரு கல்வெட்டில் 'மாசாத்துவான்' என்று எழுதப்பட்டுள்ளது. இது கோவலனின் குடும்பப் பெயராகும்.

இத்தனைச் சான்றுகள் அளித்தும் மலையாளிகள் கண்ணகி கோயிலை தமிழர்களிடம் ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.

1975இல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக கேரள நில அளவையர்கள் பழைய நிலப்பதிவேடுகளின் அடிப்படையில, தற்போதைய தமிழக கேரள எல்லைப்பகுதிகளை  கூட்டாக அளவீடு செய்தனர். அப்போது கேரள எல்லையிலிருந்து 40 அடி தூரம் கடந்து தமிழக எல்லைக்குள் கண்ணகி கோயில் இருப்பதாக அறிவித்தனர்.

கேரள அரசு ஒப்புக் கொண்ட நிலையில் தமிழக அரசு கண்ணகி கோயிலுக்குச் செல்லும் கூடலூர் பனியங்குழி (6 கி.மீ) சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்ய முயன்றது. அப்போது கேரள அரசு மத்திய அரசை துணைக்கழித்து பேச்சு வார்த்தை நடத்தி முட்டுக் கட்டை போட்டது. அதன் பிறகு கேரளம் மிகத் தந்திரமாக குமுளி வழியாக தங்கள் எல்லைக்குள் 16 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைத்தது. தங்கள் எல்லைக்குள் பாதை அமைத்ததன் மூலம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பின்னர் தமிழக அரசு தந்த வரலாற்றுச் சான்றுகளை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ஒருபகுதியாக 1983 ஆம் ஆண்டு துர்க்கை தேவி சிலை ஒன்றை சுகுமாறன் என்பவர் மூலம் நிறுவியது. பின்னர் கேரள அரசு தந்த ஊக்கம் காரணமாக  தமிழரின் வழிபாட்டுத் தெய்வமாகிய கண்ணகி சிலைக்கு மலையாள இனவெறியர்கள் சிலர் சேதம் ஏற்படுத்தினர்.

மலையாளிகளின் துர்க்கை வழிபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கண்ணகி வழிபாட்டை ஒழித்துக் கட்டி கோயிலை அபகரிக்கப்பதே கேரள அரசின் வஞ்சகப் புத்தியாகும்.  பாவப்பட்ட நம் தமிழர்களோ சேதமடைந்த கண்ணகி சிலையில் மீது இப்போது சந்தனக்காப்பு வைத்து வணங்கி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தேக்கடியில் நடைபெற்ற கண்ணகி விழா கலந்தாய்வு கூட்டத்தில் கேரள தொல்லியல் துறை இயக்குநர் பிரேம் குமார் என்பவர் தமிழ்ப்பண்பாட்டுச் சின்னம் அழியாமல் பாதுகாத்திட கோயில் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது புலிகள் சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவன் குமார் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதற்கு வனத்துறை, புலிகள் சரணாலயம், உச்ச நீதிமன்றம் ஆகிய மூன்றின் அனுமதி பெறாமல் புதுப்பிக்க முடியாது  என்று கொக்கரித்தார். 1980ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தான் கண்ணகி கோயில் இருந்தது. பிறகு அதனை சீரமைக்கும் பொறுப்பு கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை சீரமைக்க கேரளஅரசு தற்போதுவரை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் போல கண்ணகி கோயில் சிக்கல் வெளியே தெரியக்கூடாது என்று ஆளும்  திராவிடக்கட்சிகளும் மூடி மறைக்கப் பார்க்கின்றன. தமிழர்களின் மூன்று நாள் வழிபாட்டு உரிமையும் ஒரு நாளாகி விட்டது, கோயிலும் அறிவிக்கப்படாமல் கேரள வசமாகி விட்டது.

ஏற்கெனவே திராவிட இயக்கங்கள் 'திராவிடநாடு' கேட்ட காரணத்தால் தமிழகம் மாலியத் திருத்தலமான வடவேங்கடத்தை இழந்தது. சிவனிய திருத்தலமான காளகத்தியை இழந்தது.  அப்போது நடந்த வரலாற்றுத் தவறு மீண்டும் நடக்க தமிழர்கள் இனியும் அனுமதிக்கலாகாது. முல்லைப் பெரியாறு அணை காக்க திரண்டது போல் தமிழர்களின் உணர்வோடு, மொழியோடு, பண்பாட்டோடு, வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட கண்ணகி கோயிலை மீட்டெடுக்க தமிழர்களே.. எப்போது ஒன்று திரள்வீர்...

நன்றி: பழ.நெடுமாறன் எழுதிய, 'தமிழன் இழந்த மண்' நூல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.