23/08/2017

7 தமிழர் விடுதலை வழக்கு: தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா? பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இச்சிக்கலில் ஜெயலலிதாவின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் பல்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் மட்டுமே ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை 2000-ஆவது ஆண்டுகளின் தொடக்கத்திலேயே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இன்னும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில் தான் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. இதேவழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவிலும் இதே நிலைப்பாட்டைத் தான் தமிழக உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்போது தாக்கல் செய்யப்பட்டது 2012ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மனு என்றும், அதற்கு பதிலாக புதிய மனுவைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அரசு கூறியிருந்தது. இதனால் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், அதனால் இவர்களின் விடுதலையை தாங்களும் எதிர்ப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

இது மிகவும் அபத்தமான, ஆபத்தான வாதம் ஆகும். ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எழுவரும் 23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்திருந்ததால் அவர்களை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஜெயலலிதா, அதுகுறித்த மத்திய அரசின் கருத்தைக் கேட்டார். ஆனால், கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் 7 தமிழரும் இன்னும் விடுதலையாக முடியவில்லை. ஆனாலும், 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஜெயலலிதா அரசின் நிலையாக நீடித்தது.

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை குறித்த வழக்கிலும் இதே நிலைப்பாட்டைத் தான் தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். மாறாக, தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால் நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறுவதன் மூலம் மத்திய ஆட்சியாளர்களின் தமிழகத் தரகர்களாக அதிமுக அரசு மாறி வருகிறது என்பதையே காட்டுகிறது. தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான் மத்திய அரசின் வழக்கம். அதை எதிர்ப்பது தான் தமிழக அரசின் வழக்கமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை இரு தமிழர்களையும் விடுதலை செய்யத் தயார் என்று தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்து, அதை உயர்நீதிமன்றம் ஏற்காமல் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்று அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்திருந்தால் கூட நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நமக்கு துணையாக இருந்திருக்கிறது என்ற நிம்மதியாவது தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால், தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம், உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றில் ஜெயலலிதா அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலையை பன்னீர்செல்வம் அரசும், பழனிச்சாமி அரசு எவ்வாறு மேற்கொண்டனவோ, அதே மாற்றம் தான் 7 தமிழர் விடுதலை விவகாரத்திலும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்தால் அதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராஜிவ் கொலைக்கு காரணமான வெடிகுண்டை தயாரித்தது தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், இலைமறை காய்மறையாக  தெரியவந்துள்ள சில தகவல்கள் ராஜிவ் கொலை வழக்கின் அடித்தளத்தையே சிதைக்கக் கூடியவையாகும்.

ஆனால், இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தமிழர்கள் விடுதலைக்கு எதிராக  மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்கமுடியாது. 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை வழக்கை விரைவுபடுத்தி சாதகமான தீர்ப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.