27/02/2018

வீட்டில் தங்க வைக்க உரிமையாளர் எதிர்ப்பு: நடுத்தெருவில் தாயை தவிக்கவிட்ட மகன்கள்...


புழல்: வீட்டு உரிமையாளர் தொல்லை காரணமாக, பெற்ற தாயை 3 மகன்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் விசாரணையில் கதறிய மூதாட்டியை, பின்னர் மகன்களே முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுச்சென்ற அவலம் நடந்துள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த வடகரை ஆதிதிராவிடர் நல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று காலை ஒரு மூதாட்டி அரைகுறை மயக்கத்தில் கிடந்தார். அதைப் பார்த்து நடைபயிற்சி சென்றவர்கள் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது மூதாட்டி கூறுகையில், ‘என் பெயர் முனியம்மாள் (66), புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் வசிக்கிறேன். என்னுடைய 3வது மகன் முருகேசன். இங்கே போட்டுவிட்டு சென்றுவிட்டான். இங்கேயே இரவு முழுவதும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தேன்’ என கண்ணீர் மல்க கதறினார். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த மூதாட்டியை மீட்டு, அவருக்கு உணவு, குடிநீர் அளித்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக முனியம்மாளின் 3 மகன்களிடமும் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, சென்னை வியாசர்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் முனியம்மாள். இவரது கணவர் துறைமுகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். சமீபத்தில்தான் இறந்துள்ளார். முனியம்மாள், தனது மகன்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் மூதாட்டி தங்குவதற்கு கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இனியும் மூதாட்டி உங்களிடம் இருந்தால் வீட்டை காலி செய்ய வேண்டிவரும் என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் செய்வது அறியாமல் தவித்த முனியம்மாளின் 3வது மகன் முருகேசன் மற்றும் அவரது சகோதரர்கள் தங்களது தாயை வடகரை பகுதியில் விட்டுச் சென்றதாகக் கூறினர்.

மேலும் போலீசாரின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த மூதாட்டியை அழைத்துச் சென்ற முருகேசன் மற்றும் 2 மகன்கள் போரூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் முனியம்மளை சேர்த்து விட்டுச் சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.