01/04/2018

விவசாய சங்கப் போர்வையில் ஓஎன்ஜிசியின் உறவுக்காரர்கள்...


விலைபோன விவசாய சங்கங்கள்...

தமிழக விவசாயிகள் நலச்சங்கம்..
காவிரிபாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம்..
நெல்உற்பத்தியாளர்கள் சங்கம்..
அனைத்து விவசாய நலவாழ்வு பேரவை..
விவசாயிகள் வாழ்வுரிமை சங்கம்..
பாசன விவசாயிகள் சங்கம்..

நாம் பலரும் நம்பிக்கொண்டிருக்கும் பல விவசாய சங்கங்கள் தான் (சில நல்ல விவசாய சங்கங்கள் தவிர) மிகமுக்கியமான விஷமிகள். விவசாய சங்கம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு  விவசாயத்தையே அழிக்கும் நச்சுக்கிருமிகள்.

இவர்களுக்கு விவசாயம் நடக்க வேண்டும், விவசாயிகளை, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. இவர்கள் உருவானதே விவசாயத்தை அழிக்கத்தான். ஆம், விவசாயம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் தனக்கான கமிஷன் , இழப்பீடு, மானியம், கடன் தள்ளுபடி இதை வைத்து வேறு ஏதாவது சம்பாதிக்கும் வழிமுறை உண்டா என சிந்திக்கும் சுயநலவாதிகள். இது நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சி தரும். ஆனால் உண்மைகள்.

ஆம், இவர்களை எளிதில் உங்களால் கண்டுபிடிக்க இயலாது, மற்ற விவசாயசங்கள் போலவே பச்சை துண்டு போட்டுக்கொண்டு வெள்ளை வேட்டிசட்டைகள் போட்டுக்கொண்டு நானும் விவசாயி தான் என்று கூச்சலிட்டுக் கொண்டும், விலைஉயர்ந்த மகிழுந்துகளில் வரும் பெருநிழக்கிழார்கள்.

அரசு கொடுக்கும் மானியம், கடன் தள்ளுபடி, இழப்பீடுகள் சாதாரன சிறு, குறு விவசாயிகளுக்கு, (1,2 ஏக்கர் மட்டுமே வைத்துக்கொண்டு, விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும்) முழுமையாக சென்று சேர்வதில்லை, இந்தசலகைகளால் பெரிதும் பலனடைபவர்கள் இந்த பெருவிவசாயிகளே.

நான் விவசாயிகளை குறையேதும் சொல்லவில்லை என்பதை நன்றாக புரிந்துகொள்ளவும். நான் கூறுவது விவசாயிகள் போர்வையில் இரூக்கும் விவசாய சங்கங்களை.

இது எப்படி என்றால்?

உண்மையில் தான் ஒரு விவசாயி என்றால் தன் விவசாயத்திற்க்கு ஆபத்தாக வரும் திட்டங்களை எதிர்த்து போராட வேண்டும். விவசாய நிலங்களை அழிக்கும், கெயில்குழாய் பதிப்பை எதிர்த்து போராட வேண்டும். மண்ணை மலடாக்கி, நிலத்தடிநீரை கெடுக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசியை எதிர்த்து போராட வேண்டும். மத்திய மாநில அரசின் நிலம்கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். பெருவணிக சாலைகளுக்காக விவசாய நிலங்களை பிடுங்க விரூக்கும் பாரத்மாலா திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். மண்ணை மலடாக்கி, பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்துடிக்கும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட மானசாண்டோ போன்ற விதைகளை எதிர்த்து போராட வேண்டும். காவிரிநீருக்காக போராட வேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவதை எதிர்த்து போராட வேண்டும்.  உண்மையான விவசாயிகள் , விவசாயத்தை காப்பாற்ற துடிப்பவர்கள் இந்த மாதிரியான விவசாயத்தை  அழிக்கும் திட்டங்களை, நிறுவனங்களை எதிர்த்துதானே முதலில் போராடவேண்டும். சில நல்ல விவசாய அமைப்புகள் அப்படித்தான் செய்கிறது.

ஆனால் அதையெல்லாம் விடுத்து, இவற்றை திசைத்திருப்பும் நோக்கில் சுயநலமான  விவசாய சங்கங்கள் , விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இழப்பீடு வேண்டும், நஷ்டஈடு வேண்டும், மானியம் வேண்டும், கரும்புக்கு 1ரூ விலை கூட்டிக்கொடுக்க வேண்டும், அதற்க்கு விலையை கூட்டிகொடுக்க வேண்டும். இதற்கு இதை கூட்டிக்கொடுக்க வேண்டும் என்று பேசுவார்கவார்களே தவிர, மண்ணை கூட்டிக்கொடுக்கும் காவாலிகளை, விவசாயவிரோதிகளை, நாசகாரத் திட்டங்களை,, முக்கியமாக நிறுவனங்களை எதிர்த்து போராட மாட்டார்கள். ஏன்? எதற்க்காக?

இழப்பீடு முக்கியம் தான், மானியம் முக்கியம் தான்., கடன் தள்ளுபடியும் முக்கியம் தான். அதற்க்கு மாற்றுக்கருத்தில்லை, குறைகூற வில்லை" ஆனால் அதைவிட  விவசாய மண் முக்கியமில்லையா? காவிரி நீர் முக்கியமில்லையா? சுத்தமான காற்று முக்கியமில்லையா? விவசாயத்திற்க்கே மூலதனமான நிலங்களையே விட்டுக்கொடுத்துவிட்டு வேறு எதற்க்காக போராடப் போகிறார்கள்? முதலில் மண் முக்கியம். பிறகு தான் மானியம். மண்ணை காப்பாற்றினாலே, மானியங்கள் தேவையில்லை.

அக்காலத்தில் எப்படி லாபகரமாக விவசாயம் செய்தனர்? நம்முன்னோர்கள் எப்படி செழிப்போடு வாழ்ந்தனர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுக்கு சுத்தமான நீர் பற்றாக்குறை யில்லாமல்  கிடைத்தது. மழைநீரை ஏரி., குளம், ஆறுகளில் சேகரித்து வறட்சி காலங்களில் பயன்படுத்தி விவசாயம் செய்தனர். நீர்மேலாண்மையை திறம்பட கையாண்டனர்! ஆனால் இன்று? ஏரி எங்கே? குளம் எங்கே? அவற்றை துற்று பெருநிறுவனங்களுக்கு அபார்டமென்ட்., கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்டிட அனுமதித்துவிட்டோம். ஓஎன்ஜிசி போன்ற நிறுனங்கள், தொழிற்சாலைகளை எதிர்க்காமல் அவற்றின் குத்தகைத்தொகைக்கு ஆசைப்பட்டு நம் விவசாய நிலங்களில் அமைக்க அனுமதித்துவிட்டோம். இப்பொழுது நீரை சேமித்து வைக்க குளம், ஏரிகளும் இல்லை.,, அப்படி இருந்தாலும் இந்த ஓஎன்ஜிசி,, தொழிற்சாலைகளின் அமிலத்தன்மையான., நச்சு கலந்த, கழிவு நீர்கள் கலந்து பாழாகிப்போவதை பார்த்துக்கொண்டிரூக்கிறோம்.

இப்படி நிலை இருந்தால் எப்படி விவசாயம் நடக்கும்? எப்படி தண்ணீர் கிடைக்கும்? நம் முன்னோர்காலத்தில் ஓஎன்ஜிசியும் தொழிற்சாலைகளும், மின்மோட்டார்களும்கூட இல்லை! நல்ல நிரம்பிய தண்ணீர், நல்ல காற்று, மண் இருந்தது! ஆக லபகரமாக விவசாயம் நடத்தி செழிப்பாக வாழ்ந்தனர்.

இப்பொழுது கூறுங்கள் தவறு யார்மீது? நாம் முதலில் எதை எதிர்த்து போராட வேண்டும்? இந்த மாதிரியான நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும், அழிவுத் திட்டங்களையும் விரட்டினாலே போதும்.

ஓஎன்ஜிசியின் அமிலக்கழிவுகள்  கலக்காத நீரை, தொழிற்சாலை புகையால் மாசுபடாத காற்றை, கெயில்குழாயின் கச்சா எண்ணெய் கசியாத மண்ணை நாம் மீட்டெடுக்கலாம். நம் முன்னோர் செய்த அதே லாபகரமா விவசாயத்தை செய்து செழிப்பாக வாழலாம்., வங்கிகளில் கடன் வாங்கத் தேவையில்லை! அரசிடம் இழப்பீடு கேட்டு கெஞ்சத்தேவையில்லை! வளமாக சுகபோகமாக தற்சார்பாக வாழலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் செய்யாமல்., இந்த ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு போராட்டத்தை மடைமாற்றி திசைதிருப்பி காரப்பரேட் நலன்காக்கும் இந்த நச்சு போலி விவசாய சங்கங்களை என்னவென்பது? என்னசெய்வது?

இவர்கள் விலைபோனதற்க்கு சான்றுகளை பார்ப்போம்!
தற்போது காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் மக்கள், விவசாயிகள் அவர்களோடு கைக்கோர்த்து மாணவர்களும் மண்ணை மலடாக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்தும்., கெயில்குழாய் பதிப்பை எதிர்த்தும் சமரசமில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்க்கு ஆதரவளிக்காமல் இந்த ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் பணம்பெற்றுக்கொண்டு போராடும் மக்களுக்கு எதிராக, ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுகின்றார்கள். பத்திரிக்கையாளர்களை அழைத்து ஓஎன்ஜிசியால் எங்களுக்கோ., விவசாயத்திற்க்கோ எந்தவித பாதிப்பும் இல்லை!" என்று  அறிக்கை விடுகிறார்கள்.

எதற்க்காக இப்படி செய்கிறார்கள். யாருக்காக இப்படி செய்கிறார்கள். என்பதை நீங்கள்ள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த போலி விவசாயசங்கம் தான் மக்களோடு போராடும் சில நேர்மையான விவசாயசங்கங்களை போலிகள் என்று விமர்ச்சிக்கிறார்கள்! இவர்களின் அறிக்கை.,, தீர்மானங்களிலிருந்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் 2018 பிப்ரவரி 6ம்நாள் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் அறிக்கை...

ஓஎன்ஜிசி பணியால் எந்தவித பாதிப்பும் இல்லை: விவசாய சங்கங்கள் தீர்மானம்.

(Published on : 06th February 2018  தினமணி,தினகரன்., தி இந்து நாளிதழ்களில்)

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசியால் நடைபெறும் பணிகளால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று விவசாய சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி பணிகள் போதிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது, இதனால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை, ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் தேவையில் தன்னிறைவு பெறவும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும், இம்மாதம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் ஓஎன்ஜிசி தொழிலாளர் மாநாட்டில் அனைத்துச் சங்கங்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் பல்வேறு அமைப்பு சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பேசியது: கோட்டூர், குடவாசல், நன்னிலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசியால் நடைபெறும் பணிகளால் எந்தவித பாதிப்பும் இல்லை.  சில போலி சங்கங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெருமளவில் பணம் பெற்றுக்கொண்டு வீண் வதந்திகளை மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடையே பரப்புகின்றனர். இவர்கள்மீது தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு வெண்ணாறு பாசன விவசாய சங்கத் தலைவர் அய்யாறு தலைமை வகித்தார்.  ஆற்றுப் பாசன சங்கச் செயலர்  வீரசேகர் உள்ளிட்ட அனைத்து பாசன சபை கூட்டமைப்பு, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம், காவிரி பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம், அனைத்து கட்டடத் தொழிலாளர்கள் சங்கம், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வாழ்வுரிமை சங்கம், அனைத்து விவசாய நல வாழ்வு பேரவை சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

இவ்வாறே இந்த போலி விவசாய சங்கங்களின் நிலைப்பாடாக நம் டெல்டா பகுதி மாவட்டங்களில் உள்ளது.

போலிகளை புறந்தள்ளுவோம். நல்லவற்றை நமதாக்கி கொள்வோம்..

முழு விவரங்களுக்கு : I Support Kathiramangalam
Link : https://www.facebook.com/amilemurian/

-தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.