11/04/2018

மனநிலை பாதிக்கப்பட்டவரை, உறவினர்களிடம் ஒப்படைத்த பிரம்மதேசம் காவல்துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு...


விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே உள்ள முன்னூர் காலனி பகுதியில் கடந்த 06.04.2018 அன்று மாலை சுமார் 07.00 மணியளவில், 21 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக்கொண்டு இருப்பதாக பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் பாபு ஆகிய இருவரும் முன்னூர் கிராமத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் என்றும், அவருக்கு பேச்சு திறனும் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அவரது பெயர் மற்றும் முகவரி அறிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டதால் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, உணவு வழங்கி அந்த நபரை பற்றி விசாரணை செய்த பிரம்மதேசம் காவல் நிலைய காவலர்கள் பாலசுப்பரமணியன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் அந்நபரின் புகைப்படத்தை காட்டி பிரம்மதேசம் அருகே உள்ள கிரமங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு  நல்லாவூர் கிராமத்தில் விசாரித்தபோது அந்நபர் பெயர் சிவா வயது 21 என்று தெரியவந்தது.

மேற்படி நபர் சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் B.E. கட்டடப் பொறியியல் (civil engineering) படித்து வந்ததாகவும் அதன் பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு படிப்பை தொடரமுடியாமல் போனதும் உறவினர் பராமரிப்பில் இருந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை வி்ட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு வராமல் காணாமல் போயுள்ளார். அதனால் அவரை அவரது உறவினர்கள் பல ஊர்களில் தேடிவந்துள்ளனர். இந்நிலையில், காவலர்கள் இருவரும் அந்த நபரின் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மனநிலை பாதிக்கப்பட்ட நபரை ஒப்படைத்தனர்.

அந்நபரின் உறவினர்கள் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் காவல் துறையினரின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பாராட்டினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.