11/04/2018

கல்குவாரி அமைப்பதை எதிர்த்து போராடியவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வதை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்...


பெரம்பலூர்,ஏப்.11: குடியிருப்புகளுக்கு அருகே கிரஷர், கல்குவாரி அமைக்க  தடை விதிக்க போராடுவோர் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்து நரிக்குறவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்பநகர், ராமலிங்கம் நகர் பகுதிகளில் நரிக்குறவர்கள் மற்றும் கலைக்கூத்தாடிகளாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் தனியார் நிலங்களை விலைக்கு வாங்கி கல்குவாரி, கிரஷர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதனை தடுக்க வலியுறுத்தி கலெக்டர்அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலமுறை மனுக்கள் தரப்பட்டது. இருந்தும் கிரஷர், கல்குவாரி அமைக்கும் இயந்திரங்கள், லாரிகள் தளவாடங்கள் அப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டதால் நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் அவற்றைத் தடுத்து, தளவாடங்களை, லாரிகளை சிறைபிடித்தனர்.

கடந்த 2ம்தேதி பெரம்பலூர் கலெக்ட ரிடம் புகார் மனு கொடுத்ததோடு, 7ம்தேதி புதுபஸ்டாண்டில் நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் கல்குவாரி அமைக்கும் நிறுவனம் தங்கள் தளவாடங்களை நரிக்குறவர்கள் பறிமுதல் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் நேற்று டிஎஸ்பி அலுவலகத்தில் நரிக்குறவர்களை அழைத்து விசாரணை நடந்தது.இதில் பொய்வழக்கு போடுவோமென மிரட்டப்படுவதை உணர்ந்த நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களது புகாரை கலெக்டர் சாந்தா கண்டுகொள்ளாததால் ஆத்திரமுற்ற நரிக்குறவர்கள், கலெக்டர் அலுவலக பிரிவு ரோட்டிற்கு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார், டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அங்கிருந்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புத் தலைவர் காரை சுப்ரமணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க மாலையில் ஏற்பாடு செய்வதாக ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார் அளித்த உறுதியை ஏற்று அங்கிருந்து நரிக்குறவர்கள் கலைந்து சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.