30/07/2018

தமிழகத்தில் பிறமொழி பேசுவோர்...


தமிழகத்தில் பிறமொழி பேசுபவர்கள், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எவ்வளவு பேர் எனும் விவரம் அண்மையில்  வெளியிடப் பட்டுள்ளது.

அதன்படி, ஏறக்குறைய ஆறு கோடியே 40 இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தமிழ் பேசுகிறார்கள். அடுத்த படியாக, ஏறக்குறைய 42 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தெலுங்கு பேசுகின்றனர். ஏறக்குறைய 4 இலட்சம் பேர் இந்தி பேசுபவர்களாக இருக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2011 ஆம் ஆண்டில்  தமிழகத்தில் வங்காள மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 160 % அதிகரித்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் தொகை 107 % வளர்ந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் இங்குள்ள வேலை வாய்ப்பு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலுள்ள நடுத்தர வர்க்கக் கல்வி கற்றவர்களைத்தமிழகத்தை நோக்கி ஈர்த்துள்ளது.

மேலும் இடம் பெயர் மக்கள் குறித்து  2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, 20.9% பேர் போர்டு, ஹுண்டாய், பிஎம்டபுள்யூ மற்றும் நிசான் தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் வாழ்கின்றனர். இடம் பெயர் தொழிலாளர்களில் 51.3% பேர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

ஜவுளி மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள காரணத்தால், தமிழகத்திலுள்ள மொத்த இடம்பெயர் தொழிலாளர்களில் கோவையில் 12.1 % பேரும், திருப்பூரில்
 9 % பேரும் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டுமனை வணிகம், மெட்ரோ இரயில் மற்றும் கட்டடத் தொழிலில் அண்மைக்காலமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகின்றனர்.

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பிறமொழி பேசுபவர்கள், தமிழகத்தில் திடீரென  அதிகரித்து வருவதைத் தமிழகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற அரசியல் சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கியுள்ளது.   இருப்பினும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, அவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டிய மாபெரும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அரசு இந்த விடயத்தில் கருத்தூன்றிச் செயல்படா விட்டால், பிற மாநிலங்களில் இருந்து வரும் பிற மொழி பேசக் கூடியவர்களால் இங்கு பல்வேறு சிக்கல்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. 

அரசு மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தமிழக மக்களும் இச்சிக்கலில் கவனம் குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.