சைலண்ட் ஹார்ட் அட்டாக் பலருக்கு ஏற்படுவதால் அதைப் பற்றி தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டால் பலரது உயிர் காக்கப்படும், அதன் முதல் அடியே ஆகாஷ் கண்டுபிடித்துள்ள கருவி.
பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார் வலி, மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகள் ஏற்படும். ஆனால் சைலண்ட் ஹார்ட் அடாக் ஏற்படுவோருக்கு இதுபோன்று எதுவும் வருவதில்லை. அதுபோன்ற சமயத்தில் பலரும் அதை சாதரண ஜுரம், உடல்வலி என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வரவிருக்கும் ஆபத்தை உணராமல் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பலரும் ஏமாந்து போகின்றனர்.
ஆகாஷின் தாத்தாவிற்கு இதுபோன்று ஒருமுறை சைலண்ட் மாரடைப்பு ஏற்பட்டது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இதை கண்டுபிடிக்க ஒரு கருவி தேவை என யோசித்த ஆகாஷ் ஆய்வில் இறங்கினார்.
என் தாத்தா ஒரு சர்க்கரை நோயாளி, அதிக ரத்த அழுத்தமும் உடையவர். ஆனால் ஆரோக்கியமாக இருந்தார். ஒருமுறை உள்ளுக்குள்ளே ஏற்பட்ட மாரடைப்பில் நிலைகுலைந்து இறந்து போனார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறினார் ஆகாஷ். ஆகாஷுக்கு மருத்துவ ஆய்வுகள் என்றால் அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே மருத்துவம் சம்மந்தமான ஆராய்ச்சிகளை படிப்பார்.
பெங்களுருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் மையத்தின் நூலகத்துக்கு சென்று அவ்வப்போது படித்து தன் அறிவை பெருக்கிக் கொள்வார் ஆகாஷ். ஹோசூரில் வாழும் ஆகாஷுக்கு அந்த மையம் ஒரு மணி நேர தூரத்தில் இருப்பதால் அந்த நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆய்வுக் கட்டுரைகள் எடுத்து படிக்க அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. அதனால் நூலகங்கள் சென்று படிக்கத்தொடங்கினார் ஆகாஷ்.
நான் படித்துள்ள ஆய்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டி இருந்தால் அது கோடிகளை தாண்டி இருக்கும் என்கிறார். மருத்துவ அறிவியலில் ஆர்வம் மிகுதியால் அது சம்மந்த ஜர்னல்களை எடுத்து படிப்பது எனக்கு பிடிக்கும் என்கிறார்.
துளையில்லா தொழில்நுட்ப முறையைக் கொண்டு ஆகாஷ் இந்த கருவியை உருவாக்கினார். இது ரத்தத்தில் ப்ரோடீன், FABP3 இருப்பதை கண்டுபிடிக்கும். ஒருவரின் மணிக்கட்டு அல்லது காதுப் பகுதியில் பின்னால் பொருத்திடவேண்டும். ஹஃப்பிங்க்டன் போஸ்ட் பேட்டியில் கூறிய ஆகாஷ்,
“ப்ரோடீன் வகைகளில் மிகச்சிறிய வகை FABP3 ஆகும். ரத்தத்தில் இருக்கும் இது பொதுவாக நெகட்டிவாக சார்ஜ் ஆகியிருக்கும். அதனால் பாசிட்டிவ் சார்ஜ் நோக்கி இது ஈர்க்கப்படும். இந்த தன்மையை நான் என் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தினேன்,” என்றார்.
அண்மையில் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவர் ப்ரனாப் முகர்ஜி, ஆகாஷை தனது விருந்தினராக அழைத்து பாராட்டினார். Innovation Scholars In-Residence திட்டத்தின் கீழ் அவர் அழைக்கப்பட்டார். தனது கருவி பல உயிர்களை காக்க உதவும் குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கையாக உள்ளார் ஆகாஷ். இக்கருவிக்கான காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். பொது மக்களின் நலனுக்காக இந்த கருவியை இந்திய அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் கார்டியாலஜி துறையில் படிக்க விழைகிறார். டெல்லி ஏய்ம்ஸ் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறார் இவர். இந்த இளம் வயதில் தனது ஆர்வத்தை ஒரு பயனுக்காக பயன்படுத்தி எல்லாருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் இச்சிறுவன் நம்நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். இவருக்கு நமது வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.