15/08/2018

மாநில சுயாட்சி முழக்கத்தை உருவாக்கியது திராவிட இயக்கமா?


"இந்து"  சமசுக்கு மறுப்பு...

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழ் "இந்து" ஏடு முரசொலி ஏட்டை மிஞ்சும் வகையில் நாள்தோறும்  அவருக்கு புகழ்  மாலை சூட்டி எழுதி வருகிறது . இன்றைய தமிழ் "இந்து" (13.8.2018) ஏட்டில் எழுத்தாளர் சமஸ் "கருணாநிதி சகாப்தம்" என்ற தலைப்பில் அவர் புகழ் பாடும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதிலே, திராவிட இயக்கத்தின் "திராவிட நாடு" கோரிக்கையானது  இந்திய விடுதலைக்குப் பிறகு, அது சாத்தியமற்றுப் போனதால் மாநில சுயாட்சி கோரிக்கையை  தாமே உருவாக்கி கொண்டதைப் போல எழுதியுள்ளார். இது உண்மைதானா? என்பதை விளக்குவதே நமது நோக்கமாகும்.

சமஸ் எழுதுகிறார்...

பிரிட்டிஷ் காலனியாதிக்க இந்தியாவில் திராவிட நாடு வேட்கையோடு அரசியல் களம் புகுந்த பெரியார், அண்ணா வழிவந்தவர் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தோடு தனி நாடு கனவு இற்றுப்போனபோது தமிழ் மக்களை ரத்தக்களறியில் திருப்பிவிடாமல் இந்திய ஒன்றியம் எனும் அமைப்புக்குள் சாத்வீக வழியில் தேசிய இனங்கள் தம் உரிமைகள், அதிகாரங்களை வென்றெடுக்கும் வழிமுறையைக் கண்டதும், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை விரிவாகப் பயிற்றுவித்ததும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனை.

பிரித்தானியருக்கு கட்டுப்பட்டு, அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் "திராவிடநாடு" அமைக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர்கள் தான் பெரியாரும், அண்ணாவும்.

பிரித்தானியர் திராவிடநாட்டைப் பிரித்துக் கொடுக்காமலே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடுதலை தந்த போது, அதற்கு எதிராக திராவிட மக்களை அணி திரட்டி அகிம்சை வழியிலே கூட  போராடுவதற்கு திராவிட இயக்கம் அப்போது தயாராக இல்லை என்பதே உண்மை.

திராவிட இயக்கம் ஏதோ,  துப்பாக்கி ஏந்திப் போராடியதைப் போலவும்,  இரத்த களறியில் தமிழ் மக்களை திருப்பி விட அவற்றிற்கு விருப்பம் இல்லாததைப் போலவும், தாம் எடுத்துக் கொண்ட கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார் சமஸ்.

தேசிய இனம் என்ற சொல்லாடலை மருந்துக்கு கூட பயன்படுத்தாத இயக்கம் தான் திராவிட இயக்கம். மொழிவழி பிரிந்து இன வழி கூடுவதுதான் திராவிட நாடு என்றார் அண்ணா. தமிழ்த் தேசிய இனம்  என்ற ஒன்று இருப்பதைச் சொல்லாமலே, தமிழ் மொழி வேறு, திராவிட இனம் வேறு என்று தவறாக விளக்கம் கூறி தமிழின அடையாளத்தைக் குழப்பி விட்டார்.

மேலும், தமிழ்நாடு நீங்கலாக ஏனைய ஆந்திரா, கேரளா, கர்நாடகப் பகுதிகளுக்குச் சென்று "திராவிட நாடு" கருத்துப் பரப்பலை அண்ணா மேற் கொள்ளவும் வில்லை. பின்னர்
திராவிட நாடு கனவு இற்றுப் போகாமல், நாற்று போல வளருமா என்ன?  சமசு "தனி நாடு கனவு" எதற்காக இற்றுப் போனது என்பதைச் சொல்லாமல் தவிர்த்து விட்டார்.

அடுத்து, சமஸ் எழுதுகிறார்..

அவர்கள் உருவாக்கிய ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கமானது இந்தியா என்கிற சிந்தனையையும் விஸ்தரிப்பதானது. நாட்டின் பாதுகாப்பு நீங்கலாக எல்லா அதிகாரங்களையும் மாநிலங்கள் சிந்திப்போம் என்ற அண்ணாவின் கனவு பல விஷயங்களில் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது.

அண்ணா வழியில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி, நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

மத்தியில் கூட்டாட்சி -மாநில சுயாட்சி என்பது அவர்கள் உருவாக்கினார்கள் என்கிறாரே சமசு? இது உண்மைதானா? மாநில சுயாட்சி பற்றி தி.மு.க. பேசியது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதன் கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்கிற உண்மையை சொல்வதற்கு சமசுக்கு மனமில்லை போலும்!

1945 சூன் 26 இல் திருச்சி மலைக்கோட்டையில் நடந்த இலக்கிய கூட்டத்தில் முதன்முதலில் "மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் சமஷ்டி" என்று பிரகடனம் செய்தவர் ம.பொ.சி‌ . தான் .

1946இல் தமிழரசுக் கழகம் உருவான பிறகு "புதிய தமிழகம்" என்ற பெயரிலே, (அப்போது ஆந்திரர்கள் "விசாலாந்திரம், கேரளர்கள் "ஐக்கிய கேரளம்" என்று கூறி வந்தனர்) மூன்று அதிகாரங்களை மட்டுமே தானே விரும்பி மத்திய அரசிடம் விட்டு விட்டு, எஞ்சிய அதிகாரங்கள் உள்ளிட்ட இதர எல்லா அதிகாரங்களையும் கொண்ட சுயாட்சி பிரதேசமாக தமிழகம் விளங்க வேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார்.

மாநில சுயாட்சி கேட்டதற்கு எதிர்ப்பு காட்டிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகியதோடு பல்வேறு காலங்களில் மாநில சுயாட்சி குரலை எழுப்பி வந்த ம.பொ.சி. அண்ணா காலத்திலும் சரி, கருணாநிதி காலத்திலும் சரி அந்தக் குரலை தாழ்த்த வில்லை.

நாட்டிலேயே மாநில சுயாட்சி தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றியவர் கருணாநிதி என்பது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னதாக அந்த தீர்மானத்தை தமிழக சட்ட மன்ற வரலாற்றிலே முன் மொழிந்து  பேசியவர் ம.பொ.சி. தான்.

21. 8.1870இல் மாநில சுயாட்சி வழங்க கோரும் தீர்மானத்தை சட்ட மன்றத்தில் ம.பொ.சி. கொண்டு வந்ததோடு,  மத்தியில் போக்குவரத்து, அயல்நாட்டு உறவு, பாதுகாப்பு ஆகிய மூன்று அதிகாரங்களை வைத்தக் கொண்டு மீதமிருக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், இந்திய அரசியல் சட்டம் இதற்கு ஏதுவாக திருத்தப்பட வேண்டும் என்றும் பேசினார்.

ம.பொ.சி. முன்மொழிந்த தீர்மானத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்த முதல்வர் கருணாநிதி அவர்கள் டாக்டர் இராஜமன்னார் குழு பரிந்துரை கிடைத்தவுடன் சுயாட்சி கோரும்  தீர்மானம் கொண்டு வரப்படும் என்று உறுதி கூறினார்.

நான்கு ஆண்டுகள் கழித்து, இராஜமன்னார் குழு பரிந்துரை வெளியிடப்பட்டது.   24. 4. 1974இல் சட்ட மன்ற மேலவையில் முன்வைத்து, மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முன் மொழிந்தார்.

அந்த தீர்மானம் பற்றி 27. 4. 74இல் சட்ட மன்ற மேலவையில் விவாதம் நடத்தப்பட்ட போது, ம.பொ.சி‌. வரவேற்றும், அதன் குறைகளை சுட்டிக் காட்டியும் பேசினார்.

அதிலே, "தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி முன் பகுதி அதிக சுயாட்சி கோருகிகிறது. பின்பகுதி குறைந்த பட்ச சுயாட்சி கோருகிறது. அதாவது, கொள்கை அளவில் அதிக பட்ச சுயாட்சி , கோரிக்கையாக வைக்குமிடத்தில் குறைந்த பட்ச சுயாட்சியை முதல்வர் கேட்டுருக்கிறார். மொத்தத்தில் சொன்னால், "டீசென்ரலைசேஷன்" என்ற அளவிற்கு தான் தமிழக அரசு கோருகிறது. குறைந்த பட்ச சுயாட்சியோடு ஆறுதல் அடைகிறது" என்றார்.

விவாதத்தை முடித்து, வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு பேசினார். அது வருமாறு...

அண்ணா எழுதிய உயிலிலே கூட அதிக அதிகாரம் தானே கேட்டார். மாநில சுயாட்சி கேட்டாரா? இல்லை. இந்தக் கருணாநிதி தான் வெட்கங்கெட்டுப் போய் மாநில சுயாட்சிக் கொள்கையை ம.பொ.சி.யிடம் கடன் வாங்கிக் கொண்டார் என்றார்கள். நான் அதற்கு வெட்கப்படவில்லை. நல்லவற்றை கடன் வாங்குவது தவறல்ல. மாநில சுயாட்சி சிலம்புச் செல்வர் அவர்களால் நீண்ட நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற- வலியுறுத்தப்பட்டு வருகின்ற உன்னதமான கொள்கையாகும்.

மாநில சுயாட்சி முழக்கத்தை ம.பொ.சி.யிடம் வாங்கியதற்கு கருணாநிதியே வெட்கப்படாத போது, இந்த முழக்கத்தை எழுப்பிய ம.பொ.சி. பெயரைச்  சொல்வதற்கு சமசு மட்டும் வெட்கப்படுவதேன்?

நன்றி: பெ.சு. மணி எழுதிய "ம.பொ.சிவஞானம்" நூலிலிருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.