15/08/2018

ஈர்ப்பு விதி...


ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது.

நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள் தான். நாம் எதைக் குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.

நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான் என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே. யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள். இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?

ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது.

 அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள். பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று.

திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும். ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு - (குறள் எண் 595)

நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும். அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?
ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்றவேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.

ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்...

கேளுங்கள்: 'தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி. 'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்ற பழமொழி நினைவு வருகிறதா? நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்துகொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.

நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா? கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.
அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.

ஆம்...... நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில் தான்...... இல்லை இல்லை.... உங்கள் மனத்தில் தான் இருக்கிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.