06/08/2018

சிலுவை யுத்தங்கள் − 19...


இரண்டாவது சிலுவைப் போர் (கி.பி − 1147 − 1149) −3...

எகிப்தின் பாதிமிய்ய ஆட்சியும், நூருத்தீன் ஸன்கீயும்:

இக்காலப் பகுதியில் எகிப்தில் தன்னாதிக்கம் செலுத்தி வந்த பாதிமிய ஆட்சியாளரின் ஆதிக்கம் கைப்பற்றுவதற்கான போட்டியும் சதிமுயற்சிகளும் வேர்விடத் தொடங்கியிருந்தன.அப்போது பாதிமிய கலீபாவாக எகிப்தில் ஆட்சி புரிந்த "அல் ஆழித் லி தீனில்லாஹ்"என்பவர் அதிகார வலிமையற்றவராகக் காணப்பட்டார்.அவர் சகல அதிகாரங்களையும் தமது அமைச்சர் "ஷாவர் அஸ்ஸஅதீ" என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். இதனால் பொறாமையுற்ற அரசவை அமைச்சர் "ழிர்ஆம்" என்பவர், சிலுவை வீரா்களின் உதவியோடு ஷாவர் அஸ்ஸஅதீயைத் துரத்தி விட்டு அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

பதவியைப் பறிகொடுத்த ஷாவர் அஸ்ஸஅதீ,நூருத்தீன் ஸன்கீயிடம் சென்று தமக்கு உதவினால் நூருத்தீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதோடு கப்பம் செலுத்துவதாகவும், சிலுவை வீரா்களை விரட்டுவதற்கு எகிப்தியப் படைகளைத் தந்துதவுவதாகவும் கூறி,இராணுவ உதவி கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நூருத்தீன் தமது தளபதி 'ஷிர்கோ' என்பவரின் தலைமையில் ஹி.559 (கி.பி.1164) சிறு படையொன்றை எகிப்துக்கு அனுப்பிவைத்தார். இப்படையின் உதவியினால் ஷாவர் அஸ்ஸஅதீ மீண்டும் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டார். உதவியைப் பயன்படுத்தித் தனது பதவியை நிலைப்படுத்திக் கொண்டதும் நூருத்தீனுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை மறந்து, சிலுவை வீரா்களுடன் கூட்டினைந்து,நூருத்தீனின் தளபதி ஷிர்கோவை எகிப்தை விட்டும் பலவந்தமாக வெளியேற்றிவிட்டார்.

எனினும்,ஹி.562ல்(கி.பி.1167) தளபதி ஷிர்கோ மீண்டும் எகிப்தினுள் பிரவேசித்தார். இவரைத் தனியாக எதிர்கொள்ள முடியாத ஷாவர்அஸ்ஸஅதீ சிலுவை வீரா்களின் உதவியையும் பெற்றுக் கொண்டார். பிரஞ்சுக்காரா்களையும் எகிப்தியரையும் கொண்டிருந்த ஷாவரின் படைக்கும் நூருத்தீனின் தளபதி ஷிர்கோவின் படைக்கும் இடையே பாபைன் எனுமிடத்தில் நடந்த போரில் ஷாவரின் படைத் தோல்வியடைந்தது.அதைத் தொடர்ந்து ஷிர்கோ அலக்ஸாந்திரியாவையும் கைப்பற்றிக் கொண்டார்.

இந்த வெற்றியின் பின் அலக்ஸாந்திரியாவை விட்டும் வெளியேறிய பிரஞ்சுக்காரா்கள்,தமது படையின் ஒரு பகுதியினரை அங்கு விட்டுச் சென்றிருந்தனர். காலப்போக்கில் அப்படையினரின் தொல்லைகளையும் அட்டூழியங்களையும் சகிக்க முடியாத எகிப்து மக்கள் பாதிமிய ஆட்சியாளர்களிடம் முறையிடலாயினர்.

இறுதியாக பாதிமிய கலீபா ஆழித் எஞ்சிய பிரஞ்சுக்காரா்களையும் நாடுகடத்த நூருத்தீனிடம் மீண்டும் உதவி கோரினார்.அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நூருத்தீன் ஸன்கீ மீண்டும் ஷிர்கோவையே பெரும் படையுடன் அனுப்பிவைத்தார். இவரது வருகையை அறிந்த பிரஞ்சுக்காரா்கள் எகிப்தை விட்டும் சென்று விட்டனர்.

இவ்வெற்றியைத் தொடர்ந்து நூருத்தீன் ஸன்கீ எகிப்தின் தளபதியாகவும் அமைச்சராகவும் ஷிர்கோவையே நியமித்தார். சுமார் இரு வருடங்களின் பின் ஹி.564(கி.பி.1169) ஷிர்கோ மரணமாகவே,அவரோடு எகிப்துக்குச் சென்றிருந்த அவரது சகோதரரது மகன் ஸலாஹுத்தீன் யூஸுப் என்பவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

அடுத்தப் பதிவில் இருந்து ஸலாஹுத்தீன் ஐயூபியின் பக்கங்கள்...

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.