11/08/2018

அகத்தியர் தாபனம் - கங்குவேலி...


தமிழுக்கு ஐந்திலக்கணம் தந்து, தமிழை அறிவியல் மொழியாக உலகிற்கு உயர்த்திய மாபெரும் தமிழன் அகத்திய மாமுனிவர். இவர் தொடர்பாக பல அவதாரங்கள் கூறப்பட்டாலும், தமிழர் வாழ்பகுதிக்கு மிகச் சிறப்பான அங்கிகாரமாக அகத்தியர் தாபனம் விளங்குவது தமிழர்க்கெல்லாம் பெருமையாகும்.

ஆடி அவமாசை வந்துவிட்டால் அகத்திய தாபனம் விழாக்கோலம் கொள்ளும். வருடத்தில் ஒருமுறை வரும் இந்நன்னாளில் பிதிர்க்கடன் தீர்ப்பது சிறப்பு என நம் முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளார்கள்.

இந்த அகத்திய தாபனச்சூழலானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகை கொண்டமைந்த அறபுதமான, காண்பதற்கு அரிய இடமாகும்.

கங்கை மகள் பாடி வர
முத்துமகள் ஆடி வர
உழவின் வாசம் வீசி வர
உயிரின் மொழி தமிழாய் நறுமணம் தர
கங்கைவெளியில் வாழ்ந்து
கங்குவேலிக்கே பெருமை தரும்
குருமுனியின் பாதம் பட்ட மண்ணை
தாழ் பணிந்து - நிந்தன்
தமிழ் வணங்கி
நித்தம் உமை தொழுது
வாழும் வரம்
யாருக்கும் கிடைத்திராத பாக்கியம்
இம்மக்கள் பெற்ற பெரும் பேறு

அகத்தியர் வாழ்ந்த புனித பூமி கானகத்தின் செழிப்பாலும், கங்கை நதியின் குளுமையாலும், வனவிலங்குகளின் அன்பாலும், பறவைகளின் இன்னிசையாலும் அமையப்பட்ட புனித தலம். இது கங்குவேலி எனும் புண்ணிய கிராமத்தின் வரமுமாகும்.

திருக்கரசை நாதனை வணங்கி, அகத்தே அவரை நினைத்து முக்காலமும் தொழுது தமிழை மட்டுமன்றி சித்த வைத்தியம், அறிவியல் என பல தரப்பட்ட மனிதர்களுக்கு பயன்தரு சிறப்புக்களை அகத்தியர் அருளிச்சென்றார்.

திருகோணமலையிலிருந்து ஏறக்குறைய 23 மைல்கள் தொலைவில் உள்ள புனித பூமியாக கங்குவேலியும் அகத்தியர்தாபனமும் விளங்குகின்றது. இங்கு விவசாயம் கால்நடை வளர்ப்பு என்பன பிரதானமான தொழில்களாகும். இங்குள்ள சிறப்பு மிக்க சிவனாலயத்திலிருந்து மக்கள் காவடிகள், மற்றும் நேர்கடன்களுடன் அகத்தியர் தாபனம் நோக்கி புறப்படுவர்.

காட்டு வழி பயணப்பட்ட போதும், வனவிலங்குகளின் எவ்வித தொல்லையுமின்றி அகத்தியரின் அருளால் எக்குறையுமின்றி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வர்.

திருமங்கலாய், திருக்கரசை சிவனாலயம் மற்றும் அகத்தியர் தாபனம் என்பன புராதன காலத்தின் சைவசமய தொன்மையையும் தமிழின் புதுமையும் விளக்கி நிற்பதோடு மட்டுமல்லாது, தமிழரின் பண்டைய வளர்ச்சியடைந்த பண்பாட்டை எடுத்தியம்புகின்றது.

தமிழரின் பெருமை கூறிடும் இந்த புனித தலங்கள், மென்மேலும் வளர்ச்சி பெற தமிழராகிய நாம் அயராது பாடுபட வேண்டும்.

தமிழை அழித்து மறைக்க எழும் வல்லாதிக்க சக்திகளுக்கு முன்னமே வீரமிகு தமிழனாய் எழுந்து அகத்தியர் எமக்களித்த தமிழுணர்வோடு தமிழரையும் சைவநெறியையும் காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.