11/08/2018

கேரள முதல்வருக்கு சொந்தக் கார் இல்லை ; நிதியமைச்சருக்கு காணி நிலம் கிடையாது...


கேரள அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயனுக்குச் சொந்தக் கார் இல்லை. நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் காணி நிலம் கூட கிடையாது. கேரள அமைச்சர்களில் `குரோர்பத்தி' என்று எடுத்துக்கொண்டால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன்தான். இவரின் பெயரில் வங்கியில் ரூ. 2.35 கோடி டெபாசிட் உள்ளது. இந்த பாலனும் கோடீஸ்வரர் ஆன கதை சுவாரஸ்யமானது. பாலனின் மனைவி ஜமீலா அரசு மருத்துவர். அந்தவகையில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது ஜமீலா ஓய்வும் பெற்றுவிட்டார். மனைவிக்கு கிடைத்த பி.எப். உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்கள் ஏ.கே.பாலனை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. ஜமீலாவுக்கு மாதம் ரூ.52,000 பென்சனும் கிடைத்து வருகிறது. இப்படித்தான் 66 வயது ஏ.கே.பாலன் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

முதலமைச்சர் பினராயி விஜயனின் மாத வருமானம் ரூ.79,364. இவர் ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைத்துள்ளார். ரூ.22.77 லட்சத்துக்கு முதலீடு செய்துள்ளார். 95.5 சென்ட் நிலம் உள்ளது. முதல்வரின் மொத்த சொத்து மதிப்பு  ரூ.50 லட்சத்துக்குள்தான் உள்ளது.

நிதியிலேயே புரளும் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கின் நிலையோ இன்னும் பரிதாபம். இவருக்குச் சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லை. குண்டுமணியளவு தங்கமும் இல்லை. மாதம் ரூ.55,012 வருமானம் வருகிறது.  ரூ.1.40 லட்சத்துக்கு முதலீடு செய்துள்ளார். தாமஸிடம் சொந்தக் காரும் இல்லை.

கேரளாவில் இன்னொரு அமைச்சர் தன் மாத வருமானம் ரூ.1,000 என்று காட்டியிருக்கிறார். இவரின் பெயர் காடம்பள்ளி ராமச்சந்திரன். கேரள தேசவம் போர்டு அமைச்சர். இவர் சொந்தப் பணிக்கு ஆட்டோவில் தன் பணத்தில் செல்லும் ரகம். தெருவோரக் கடைகளில் சாப்பிடுவார். கட்சி அலுவலகங்களில் தங்கிக்கொள்வார். காடம்பள்ளி ராமச்சந்திரன் ரூ.99,000  மதிப்புக்குத் தங்க நகை வைத்துள்ளார். ரூ.63,000 வரை முதலீடு செய்துள்ளார். 83 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைத் தவிர இதர வருமானம் இது. கேரள அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளிப்படையாக கேரள அரசு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. கேரளாவே ஆச்சர்யம்தான்... கேரள அமைச்சர்கள் இன்னும் ஆச்சர்யம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.