13/08/2018

நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் - இது தான் நம் அனைவரின் ஆசை...


ஆனால், ஒருவரின் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அவருடைய மனநிலை மட்டுமே.

நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம்.

ஒரு பிரிவினர், தங்களுக்குக் கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, இதைவிடக் கூடுதலாகக் கிடைத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதைத் தான், மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை. அது, நம் மனநிலையில் இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.

சுருக்கமாக, நமக்கு திருப்தியைத் தருவது பாசிட்டிவ் எண்ணங்கள் தான்.

இது போன்ற மனநிலையைத் தீர்மானிப்பதில் நாம் வாழும் சூழலுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

சூழல் என்பது, அலுவலமாகவோ, உற்றார், உறவினர்களுடன் நாம் வாழும் வீடாகவோ, நண்பர்களுடன் மகிழ்ந்திருக்கும் இடமாகவோகூட இருக்கலாம்.

ஆனால், நாம் நேரத்தை அதிகம் செலவிடுவது நம் வீட்டில்.

எனவே, வீட்டில் இருந்து இதைத் தொடங்குவது தான் சரியாக இருக்கும்.

வீட்டில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை குறைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்...

வரவேற்க பாசிட்டிவ் வார்த்தைகள்...

நாம் வீட்டுக்குள் நுழையும் போது நம்மை வரவேற்பது பாசிட்டிவ் வாசகமாக இருக்கட்டுமே.

உதராணமாக, கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட இடம், எல்லாம் நன்மைக்கே போன்ற ஏதாவது, ஒரு வாசகமாக அது இருக்கலாம். இதை, கேட், கதவு, வீட்டின் வாசல் முகப்பு போன்ற இடத்தில், கண்ணில் படும்படியாக மாட்டி வைக்கவும். அதனுடன் கலர்ஃபுல்லான சிறிது பிளாஸ்டிக் மலர்களைச் சொருகி வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

மாயம் செய்யும் மலரும் நினைவுகள்...

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மகிழ்ச்சிகரமான தருணங்களையும் மலரும் நினைவுகளையும் போட்டோக்களாக பதிவு செய்து, சுவர்களில் மாட்டி வைப்பது, உங்களை உற்சாகப்படுத்தும். இது, நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க உதவுவதோடு, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கத் தேவையான உந்துதலையும் கொடுக்கும்.

ஃபர்னிச்சர் சுத்தம் உதவும்...

நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் தூய்மையாக இருந்தால், மனதுக்கு அமைதி கிடைக்கும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். எனவே, நாம் அதிகம் பயன்படுத்தும் சோஃபா, நாற்காலி போன்ற ஃபர்னிச்சர்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை தூசிதட்டி, எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

அமைதிக்கு ஓர் அறை...

வீட்டில் படுக்கை அறை, குளியல் அறை, பூஜை அறை... என இருப்பதுபோல, அமைதி கிடைக்க வழிசெய்யும் ஓர் அறையை உருவாக்கிக்கொள்ளலாம். அது, அறையாகவோ அல்லது சிறிய இடமாகவோகூட இருக்கலாம். அது பூஜை அறையாக இருந்தால், இன்னும் சிறப்பு. அந்த இடத்தில் வெளியிலிருந்து எந்தச் சத்தமும் ஊடுருவக் கூடாது. அறைக்குள் போனாலே மன அமைதி கிடைக்க வேண்டும். அந்த அறையில் தினமும் சிறிது நேரத்தை அமைதியாகச் செலவிட வேண்டும். அங்கே அமர்ந்து, தியானம், யோகா செய்வது சிறந்தது.

நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனை...

நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவே, எப்போதும் எதிர்மறையாக ஏதாவது நடந்துவிடுமோ என்று சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை மட்டுமே உருவாக்கிக் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.