13/08/2018

குண்டலினி இயக்கம்...


மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தியிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்

குறிப்புரை :

பாம்பு என்றது குண்டலினியை, 

இயந்திரம் என்றது நடுநாடியை.

பதினாறு அங்குலக் கயிறு என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை,

பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை.

அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல் என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை.

எனவே, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தியிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.

மூன்று மடக்கு என்றது, உடம்பில், அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை.

அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக.

இனி, அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில்லாமல், விழித்திருப்பது போல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம்.

பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப்புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க.

குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது.

கட்டியிட்டு என்பதில் இட்டு அசைநிலை.

பாம்பு இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே என வினை முடிவு செய்க.

இரண்டெட்டு என்பது எண்ணலளவை யாகுபெயர்.

முட்டை என்பது பாடம் அன்று.

இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.