25/09/2018

மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து...


தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் ஐ என்ற எழுத்து ஒரு காலத்தில் ஐ என்ற சொல்லாகத் தனித்து நின்று பெரியவர்கள் அண்ணன் தெய்வங்கள் தலைவன் போன்ற போன்ற பொருட்களைத் தந்திருக்கின்றது.

ஆனால் இன்றைய தமிழில் அது ஒரு எழுத்தாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. அதற்குத் தனிப்பட்ட பொருள் இன்று கிடையாது. அது வேற்றுமை உருபு ஆவது வேறு செய்தி.

முதல் நாள் போரிலே அண்ணனை இழந்து மறுநாள் போரிலே கணவனை இழந்த பெண்ணொருத்தி மீண்டும் இன்று போர்ப்பறை கேட்க மகிழ்ந்து தன் மகனையும் வேல் கொடுத்துக் களத்துக்கு அனுப்பிய கதையைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

அதிலே மேனாள் உற்ற செருவில் இவள் தன் ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே (புறநானூறு 297) என்ற அடிகள் வரும்... முன்பு நடந்த போரிலே யானையை வேலால் எறிந்து கொன்று விட்டு தானும் இறந்து போனான் இவள் அண்ணன் என்பது இந்தச் சங்கச் செய்யுள் அடிகளின் பொருளாகும். இங்கே  என்பது அண்ணன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது.

திருக்குறள் படைச் செருக்கு அதிகாரத்திலே..

என் ஐ முன் நில்லன்மின் பகைவீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

என்று ஒரு குறள் காணப்படுகின்றது.

முன்பு என் தலைவன் முன்னே போர் செய்யவந்து இறந்து இன்று கல்லறையில் கிடப்பவர் பலர். அதனால் பகைவர்களே என் தலைவன் முன் நிற்காமல் அகன்று விடுங்கள் என்பது இதன் பொருள். இங்கே ஐ என்பது தலைவன் என்ற பொருளில் வள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினத்தார் தனக்கு நஞ்சு கலந்த சோறு தரப்பட்டபோது முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்று பாடினார். முன் ஐ இட்ட தீ முப்புரத்திலே என்றால் முன்பு இறைவன் வைத்த நெருப்பு மூன்று புரங்களை எரிப்பதற்காக என்று பொருளாகும்.

பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றியவள் மூதேவி. அவளின் பின்பு தோன்றியவள் இலக்குமி. அவள் சீதையாகப் பிறந்து இராவணனால் சிறையெடுக்கப்பட்ட போது அவளைத் தேடிப் போன அநுமனின் வாலிலே தீ வைத்தான் இராவணன். அந்தத் தீயைக் கொண்டு அநுமன் இலங்கை முழுவதும் பாய்ந்து தீ மூட்டினான் என்று சொல்லும் கம்பராமாயணம். அது அநுமன் வைத்த நெருப்பு அல்ல அவன் மூலமாக திருமகள் ஆகிய சீதை வைத்த கற்பின் நெருப்பு என்பான் விபீடனன்.

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?

(கம்பராமாயணம் - யுத்த காண்ணடம் - மந்திரப்படலம்).

அண்ணா! ஒரு குரங்கினால் இலங்கைக்குத் தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா? பிடித்தாலும் எரிந்து இவ்வளவு நாசம் வருமா? சானகியின் கற்பினால் வெந்து போன எங்கள் நாட்டைத் திரும்பத் திரும்ப குரங்கு சுட்டது என்று சொல்லிக் கொண்டிருக்காதே என்பது இதன் பொருளாகும்.

அதனால் தான் பட்டினத்தார் பின் ஐ இட்ட தீ தென் இலங்கையில் என்றார். இதை உணராத ஒரு பகுதித் தமிழுலகம் இன்றும் பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்ற தொடருக்கு பின்னொரு காலத்திலே வைக்கப்பட்ட தீ தெற்கு இலங்கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இங்கே ஐ என்பது தெய்வங்களைக் குறிக்கும் சொல்லாக வந்து விடுகின்றது.

இனித் தொல்காப்பியர் ஐ என்ற எழுத்தை பெரியவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதைப் பார்ப்போம். சங்க கால காதல் ஒழுக்கங்களிலே தவறுகள் தலைகாட்ட முற்பட்ட போது பெரியவர்கள் அதைச் சீர் செய்வதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள் என்று சொல்ல வந்த தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியல்).

என்று சொல்லிவிட்டுப் போனார். இதைக் கூட காதல் வாழ்விலே பிரச்சனைகள் ஏற்பட்ட போது பிராமணக் குருக்கள்மார் திருமணச் சடங்குகளை உருவாக்கினர் என்று தொல்காப்பியர் சொன்னதாக அடம்பிடிக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்து நோக்கினால் காதலித்து நெருங்கிப் பழகியவர்கள் தாம் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்து சில இன்னல்களை ஒருவருக்கொருவர் செய்து பொய்யும் தவறுமாக நடக்க முயன்ற போது அதை மாற்றியமைக்க பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வகுத்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகும்.

எனவே ஐ என்ற எழுத்து ஐ என்ற சொல்லாகிப் பயன்பட்ட காலம் போய் வெறும் எழுத்தாக மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலத்தில் எழுத்தாகவாவது நிலைக்குமா என்பது தெரியவில்லை.

கணணி விசைப் பலகையில் ஐ என்பதை அய் என்று எழுதினால் என்ன என்று சிந்திக்கின்றார்கள். ஆம், சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.