ஆழ்மன சக்தியில் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் ஒன்றாக உடலை விட்டு வெளியேறி அனைத்தையும் காண முடிந்த சக்தியை க் குறிப்பிட்டு இருந்தோம். அப்படி உடலை விட்டு வெளியேறிய பின் காண்பது மட்டுமல்லாமல், கேட்பது, உணர்வது, தகவல்கள் தெரிவிப்பது, அறிந்து கொள்வது போன்றவையும் சாத்தியமாகும் ஆழ்மன சக்தியை சித்தர்கள், யோகிகள், தெய்வீகசக்தி உடையவர்கள் போன்றோர் பெற்றிருந்ததாக பல நாடுகளின் பழங்கால ஏடுகளில் குறிப்புகள் உள்ளன.
ஆனால் சாதாரண மனிதர்கள் உடலை விட்டுப் பிரிவது ஒரே ஒரு சமயத்தில் தான். அது அவரவர் மரண காலத்தில் தான். அந்த சமயத்தில் புலன்கள் வழியாகக் கிடைக்கும் அறிவை ஐம்புலன்கள் உதவியில்லாமலேயே மனிதனால் அறிய முடிகிறது. இதை சொல்வது மெய்ஞான சித்தர்கள் மட்டும் அல்ல. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தான். இப்படிச் சொல்லும் நிலையை ஆராய்ச்சியாளர்கள் எட்டியது எப்படி என்று பார்ப்போமா?
மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்கிற கேள்வி மனிதன் சிந்திக்க ஆரம்பித்து விட்ட காலத்திலேயே அவனுள் எழுந்த கேள்வி. இதற்குப் பதிலாக பல சித்தாந்தந்தங்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும் அந்த சித்தாந்தங்கள் சரியா என்று சரிபார்த்துக் கொள்ளுதல் இயலாத காரியமாகவே மனிதனுக்கு இருந்து வந்தது. ஏனென்றால் இறந்து விட்ட பின்னரே தெரிந்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை. இறந்து விட்டாலோ திரும்பி வந்து சொல்லுதல் சாத்தியமில்லை. இந்த சிக்கல் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்வியைப் பெரிய கேள்விக் குறியாகவே மனிதனுக்கு தக்க வைத்து விட்டது.
பெரும்பாலான எல்லா மதங்களும் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைச் சொல்லி மரணத்திற்குப் பின் இது தான் திட்டவட்டமாக சொன்னாலும் பகுத்தறிவு கொண்ட மனிதன் அது சரியா என்று ஆராய ஆசைப்பட்டான். காரணம் மதங்களின் சித்தாந்தங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. பல அறிஞர்களும் தங்கள் பங்குக்கு சில சித்தாந்தங்களைச் சொன்னார்கள். கிழக்கத்திய நாடுகளில் கூடு விட்டு கூடு பாய்தல், மரணத்திற்குப் பிந்தைய பயணம் போன்ற அமானுஷ்ய பதிவுகள் அதிகமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் அது போன்ற பதிவுகள் குறைவே. ஆனாலும் அவையும் இதில் மேற்கொண்டு அறியும் ஆவலைத் தூண்டுவனவாக இருந்தன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ப்ளேடோ (Plato) என்ற கிரேக்க ஞானி தன் குடியரசு (Republic) என்ற நூலில் ஓரிடத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சிப்பாய் ஒருவன் கொள்ளி வைக்கப்படும் முன் எழுந்து தன் தற்காலிக மரணத்திற்குப் பின் என்ன ஆயிற்று என்று விவரிப்பதாக எழுதியிருக்கிறார். அந்த விவரிப்புகளில் சில பிற்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிற்கு ஒத்து வருகின்றன.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்து தத்துவஞானி விசேஷ அனுமதி பெற்று பிரமிடின் உள்ளே ஓர் இரவு தனியாகத் தங்கினார். அந்த இரவில் அவர் உடலை விட்டு வெளியேறி தன் உடலைத் தெளிவாகப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார். பிரமிடுக்குள் அவர் தனியாகக் கழித்த அந்த இரவின் அனுபவங்கள் பற்றி ரகசிய எகிப்தில் ஒரு தேடல் (A search in secret Egypt) என்ற புத்தகத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். அந்த அனுபவத்தில் நம் தற்போதைய அலசலுக்குத் தேவையான மரண் விளிம்பு அனுபவப் பகுதியை மட்டும் பார்ப்போம்......
அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.
ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு என்ற எண்ணம் வந்து போயிற்று.
உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.
அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது......
1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.
இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?
மேலும் பயணிப்போம்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.