வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து, போக்குவரத்து துணை ஆய்வாளர் வீட்டிலும், வங்கி லாக்கரிலும் நடத்தப்பட்ட சோதனையில், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்களை
ஆந்திரா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருவர் சரகடம் வெங்கட ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பி. ரணமி தேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வெங்கட ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் திடீரென ஆய்வு நடத்தினார்கள்.
மேலும், வெங்கட ராவின் வீட்டில் பணியாற்றும் டிரைவர் பி. மோகன், வெங்கட ராவின் சகோதரர் கிரண் குமார் ஆகியோர் வீடுகளிலும், வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ஏராளமான சொத்துகள், நகைகள், ,பொருட்கள், சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஏறக்குறைய 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் வெங்கட ராவ் கணக்கு வைத்துள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் இரு கிளைகளில் இருந்து 1.79 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐடிஐ ஜங்ஷன் பிரிவில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் உள்ள லாக்கரில் இருந்து 1.30 கிலோ தங்க நகையும், 10 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கவுரி கூட்டுறவுவங்கியில் ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி, பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள், வைப்பு நிதிப் பத்திரங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. வெங்கட ராவின் டிரைவர் வீட்டில் இருந்து 3 பெட்டிகளை போலீஸார் கைப்பற்றினார்கள். வெங்கட ராவின் சகோதரர் வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களையும், பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். வெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், பணம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.70 கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.