ஆழ்மனதில் ஆழமாகப் பதிபவையே நம்மை உண்மையில் இயக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இனி ஆழ்மனம் தன் தகவல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி நமக்கு எப்படியெல்லாம் அபார சேவை புரிகிறது என்பதையும், அதனிடம் அந்த வேலை வாங்குவது எப்படி என்றும் பார்ப்போம்.
மேல்மனம் உறக்கத்தின் போது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. ஆழ்மனம் உறக்கத்தின் போதும் கூட ஓய்வு எடுத்துக் கொள்வதில்லை. இதை பல ஆராய்ச்சிகள் செய்து உதாரணங்களுடன் டாக்டர் ஏ.ஸ்மித் என்ற இங்கிலாந்து மனவியல் அறிஞர் தன்னுடைய நூலில் (Does Brain Think, When I Sleep?) எழுதியுள்ளார். முன்பே கூறியது போல அது தான் சேகரித்து வைத்து இருக்கும் தகவல்களுடன் புதிதாகப் பெற்ற தகவல்களைச் சேர்த்து தக்க விதத்தில் சரி செய்தும், ஒழுங்குபடுத்தி, புதுப்பித்து வைத்துக் கொள்கிறது. மேல்மனம் எப்போதோ நினைத்து மறந்த சின்னத் தகவல் கூட ஆழ்மனதில் முறையாக சேகரிக்கப்பட்டு இருக்கும்.
இந்த தகவல் களஞ்சியத்தில் இருந்து தேவைப்பட்ட தகவல்களை எல்லாம் தேர்ந்தெடுத்து இணைத்து தொகுத்து புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய சித்தாந்தங்களையும், புதிய கோட்பாடுகளையும், பேருண்மைகளையும் முடிவாக நமக்கு உணர்த்த வல்லது ஆழ்மனம். எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையும், வாழ்வையே திசை திருப்ப வல்ல பேருண்மையையும் ஆழ்மனதின் உதவி இல்லாமல் யாரும் பெற்று விட முடியாது.
சர் வில்லியம் ஆர். ஹேமில்டன் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை, வானவியல் அறிஞர், மற்றும் இயற்பியல் அறிஞர். அவர் ஒரு முக்கிய கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது என்ன முயன்றும் அவரால் அதற்கு தீர்வு காண முடியவில்லை. 1843 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அவர் தன் மனைவியுடன் ஒரு பாலத்தின் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று பதில் தானாக அவர் மனதில் உதித்தது. அந்தத் தீர்வை மறந்து விடக்கூடும் என்று பயந்து அந்த பாலத்தின் சுவரில் கல்லால் கீறி அந்த சமன்பாட்டை அவர் பதித்தார்.
அவர் கண்டுபிடித்த க்வார்டெர்னியன்ஸ் என்ற தீர்வு இன்றும் கணிதத் துறையில் மிக முக்கிய விதியாகக் கருதப்படுகிறது. அந்தப் பாலத்தின் சுவரில் இருந்த கீறல் பிற்காலத்தில் மறைந்து விட்டிருந்தாலும் அயர்லாந்து அரசாங்கம் அதே இடத்தில் அந்த தீர்வை ஒரு குறிப்புடன் கல்வெட்டாக இன்றும் வைத்திருக்கிறது.
டாக்டர் தாம்சன் என்ற மனோதத்துவ மேதை “System of Psychology” என்ற நூலை எழுதத் துவங்கியிருந்த போது அதற்காக நிறைய படித்து குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். ஆனால் எழுதுகின்ற சமயத்தில் நிறைய விஷயங்கள் கோர்வையாக இல்லாமல் தனித் தனியாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது. ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும் போது அது கோர்வையாக வராமல் இப்படி சம்பந்தமில்லாத தனிக் கருத்துகளாக இருந்தால் அது முழுமையாக இருக்காது என்று நினைத்த டாக்டர் தாம்சன் என்ன தான் அதைக் கோர்வைப் படுத்த முயன்றும் முடியாது போகவே அவர் எழுதுவதை சுமார் ஒரு மாதத்திற்கு நிறுத்தியே வைத்திருந்தார். பிறகு ஒரு நாள் எழுதியதை எடுத்துப் படிக்கையில் விடுபட்டதாய் நினைத்த விஷயங்கள் அவர் மனதில் தானாக பளிச்சிட்டன. உடனடியாக அவற்றை எழுதி அந்த நூலை அவர் முடித்தார். இது போன்ற நிகழ்வுகள் பல முறை தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
Synthetic Chemistry ஐ கண்டுபிடித்த விஞ்ஞானி பெர்த்லாட் அவர்களும் தன் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களில் முறையாக சிந்திக்கும் போது வந்தவை அல்ல என்றும் திடீரென்று தானாக வானில் இருந்து வந்தவை போல வந்தவை தான் என்று கூறுகிறார்.
மோசார்ட் என்ற இசை மேதை தன் 35 வருட வாழ்க்கையில் பத்து ஓபரா என்னும் இசை நாடகங்கள், 41 ஸிம்ஃபனி என்னும் விரிவான இசை நாடகங்கள், நூற்றுக் கணக்கான சிறிய இசைச் சித்திரங்கள் உருவாக்கிய மேதை. அவர் தன்னுடைய பெரும்பாலான புதிய இசைப் படைப்புகள் ஒவ்வொன்றும் முழுமையாக தானாக மனதில் தோன்றியவை என்றும், மனதில் கேட்டவற்றை அப்படியே திரும்ப உருவாக்கியது தான் அவர் செய்த வேலை என்றும் கூறுகிறார். நம் கணித மேதை ராமானுஜம் தன்னுடைய எல்லா கணக்குகளுக்கும் விடையை நாமகிரிப் பேட்டை அம்மன் கொண்டு வந்து தருவதாகச் சொல்லி இருக்கிறார்.
இது போல் எத்தனையோ காலத்தை வென்று நின்ற எழுத்துக்களையும், இசையையும், அறிவியல் கண்டு பிடிப்புகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றைத் தங்கள் முயற்சியால் வந்ததென அந்த அறிஞர்களால் சொல்ல முடியவில்லை. தானாக வந்ததாகவும், தாங்கள் நம்பும் இறைவன் கொண்டு வந்து தந்ததாகவும் அவர்கள் சொன்ன போதிலும் அவற்றை அவர்கள் மேல்மனதிற்குத் தந்தது அவர்களுடைய ஆழ்மனமாகவே இருக்க வேண்டும் ஆழ்மன சக்தி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எத்தனையோ முறை ஏதாவது ஒரு பெயர் மறந்து போயோ, ஒரு பொருளை வைத்த இடம் மறந்து போயோ நாம் அனைவருமே மூளையை கசக்கி இருந்திருக்கக் கூடிய தருணங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். பிறகு வேறெதோ நாம் செய்து கொண்டிருக்கையில் தானாக அது நம் நினைவில் பளிச்சிடுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். இது நம் ஆழ்மன செயல்பாடே.
நாம் பல விதங்களில் சிந்தித்தும் விடை கிடைக்காத அல்லது நினைவுக்கு வராத விஷயங்களில் இருந்து சிந்தனையை மேல்மனம் கை விட்டு வேறு விஷயங்களுக்கு நகர்த்தும் போது அந்த பழைய தேடலை ஆழ்மனம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறது. அது தன்னிடம் உள்ள தகவல் களஞ்சியத்தில் இருந்து நமது அறிவுக்கெட்டாத முறையில் பிரம்மாண்டமான விதத்தில் விடையைக் கண்டுபிடித்து வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும் மேல்மனத்திற்கு அனுப்பி வைக்கிறது. நாம் அதை ‘திடீர்’ என்று வந்ததாக நினைத்து வியக்கிறோம்.
சிறு வயதில் நாம் பூதம் அல்லது தேவதைக் கதைகள் நிறைய படித்திருப்போம். பாவப்பட்ட ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு கொடுமைக்காரர்கள் இரவில் ஏராளமான வேலைகளைத் தந்து மறு நாள் காலையில் அனைத்தையும் முடித்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த பாவப்பட்ட ஜீவன் மீது அன்பும், இரக்கமும் கொண்ட பூதமோ, தேவதையோ அந்த வேலைகளைத் தான் எடுத்துக் கொண்டு அனைத்தையும் அசுர வேகத்தில் நேர்த்தியாக செய்து தந்து விடும் என்பதைப் படித்திருப்போம். உண்மையில் நம் ஆழ்மனம் அது போன்ற ஒரு சக்தி படைத்த தேவதையே.
சிக்கலான ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வோ, அல்லது சிக்கலான ஒரு கேள்விக்கு விடையோ அறிய நாம் எந்த விதத்தில் யோசித்தும் நமக்கு பதில் கிடைக்கவில்லையானால் மேலே சொன்ன அறிஞர் பெருமக்கள் தாங்கள் அறியாமலேயே ஆழ்மனதைப் பயன்படுத்தி விடை கண்டு பிடித்தது போல நாமும் ஆழ்மனதின் உதவியை நாடலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் பிரச்னைக்கோ, கேள்விக்கோ சம்பந்தப்பட்ட அத்தனை தகவல்களையும் ஆழ்ந்து யோசித்துக் கொள்ளுங்கள். அதன் தீர்வு அல்லது விடை உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அதை மிக முக்கியமானது என்று நீங்கள் மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். எல்லா விதங்களிலும் சம்பந்தப்பட்ட விஷயங்களை யோசித்து விட்டு ஆழ்மனதிடம் ‘இதைக் கவனி’ என்று கட்டளையிடுங்கள். பின் அதை மறந்து விடுங்கள்.
இதைச் செய்யப் பொருத்தமான நேரம் இரவு தூங்குவதற்கு சிறிது நேரம் முன் என்கிறார்கள். மேல்மனம் உறங்க ஆரம்பித்தவுடன் 24 மணி நேரமும் விழித்திருக்கும் ஆழ்மனம் நீங்கள் தந்த அந்த வேலையை, தான் சேகரித்து வைத்திருக்கும் பல்லாயிரம் தகவல்களையும் பல விதங்களைலும் மிக நேர்த்தியாக அலசி மிகச் சிறந்த ஒரு தீர்வையோ, பதிலையோ மறு நாள் உங்களுக்குத் தந்து விடும். ஆரம்பத்தில் நீங்கள் தந்திருக்கும் வேலையின் சிக்கல் தன்மையின் கடுமைக்கேற்ப ஒரிரு நாட்கள் அதிகமாகக் கூட அது எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் இந்த விதத்தில் மிகச் சிறப்பான பதில் கிடைத்தே தீரும் என்பது பலரின் அனுபவம்.
இதில் மூன்று விஷயங்கள் முக்கியம். முதலாவது அது உண்மையாகவே உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் அது சம்பந்தமாக நிறைய தேவையான தகவல்களை அலசி இருக்க வேண்டும். (தகவல்கள் என்ற பெயரில் கவலைகள், பயங்களை ஆழ்மனதிற்கு அனுப்பி விடாமல் இருப்பது முக்கியம்). மூன்றாவது ஆழ்மனதிடம் ஒப்படைத்து விட்ட பின் விரைவில் அதனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கக் கூடாது.
(ஒன்பதாவது அத்தியாயத்தில் மைக்கேல் க்ரிஸ்டன் என்ற பிரபல ஆங்கில சினிமா டைரக்டர் ஸ்பூன்களைப் பார்வையாலேயே மடக்கும் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் நன்றாக கவனத்தைக் குவித்து விட்டு பிறகு கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பின பிறகு தான் இந்த சக்தி வேலை செய்கிறது என்பதை வியப்புடன் சொல்லி இருப்பதைக் குறிப்பிட்டிருந்ததைப் படித்திருப்பீர்கள். அதற்கும் காரணம் இது தான். மேல்மனம் நன்றாக முயன்று விட்டு பின் அதிலிருந்து கவனத்தை திருப்பி விட்ட பின் ஆழ்மனம் அதைத் தன் பணியாக எடுத்துக் கொண்ட பிறகு தான் சக்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது)
இரவு உறங்கப் போகும் நேரத்திற்கு முன் ஓரிரு மணி நேரம் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் அதிகமாக நாம் எண்ணும் எண்ணங்களே பெரும்பாலும் நம் உறக்கத்தில் ஆழ்மனதால் அதிகம் அலசப்படுகின்றன. அதனால் அந்த நேரத்தில் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், துக்ககரமான அல்லது வன்முறை சீரியல்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. அந்த நேரத்தில் நல்ல புத்தகங்கள் படித்தல், மனதிற்கு இதமான இசை கேட்டல், நமக்குப் பயன்படும் விஷயங்களில் ஈடுபாடுடைய செயல்கள் செய்வது எல்லாம் மிக நல்லது.
முக்கியமாக நம்முடைய இலட்சியங்கள், குறிக்கோள்கள் குறித்து அந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளுவதும், அது சம்பந்தமான செயல்களில் அந்த நேரத்தில் ஈடுபடுவதும் நாம் விரைவில் இலக்கை அடைய மிகவும் உதவும்.
இனி ஆழ்மனதின் சக்தியை அதிகரித்து பயன்பெற முக்கியமான அடுத்த பயிற்சியைப் பார்ப்போமா?
மேலும் பயணிப்போம்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.