03/12/2018

டிசம்பர்_3... ஸ்டெர்லைட் கொடூரங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போதுகூட போபால் தினம் என்பதை மறந்து போய்விட்டோம் இல்லையா?


மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்துவது நமது கடமை...

போபால் பேரழிவு...

நாள்- டிசம்பர் 2, 1984 –3 திசம்பர் 1984
நிகழிடம்- போபால் மத்தியப் பிரதேசம்
போபால் விஷவாயு கசிவு பேரழிவு
காரணம்- யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிவு...

காயப்பட்டோர் குறைந்தது 558,125 பேர்...

போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.

யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போபால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.

இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

34 ஆண்டாகியும் முறையான இழப்பீடு கிடைக்கவில்லை...

போபால் நகர மக்கள் தம் நகரத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பேரழிவை  டிசம்பர் 3ஆம் நாள்  ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நச்சுவாயுக் கசிவின் காரணமாக நேரடியாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,787 என்று அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக் கணக்கினர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.

நச்சுவாயுக் கசிவின் காரணமாகச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்வோருக்கு உதவித் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா கொடுக்கப்படும் என்று உள்நாட்டு அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருந்தார். அதை நம்பி மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்தவர்களுக்கு இன்னும் அந்த உதவி கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு கணிப்புப்படி, 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டு, புற்று நோய்க்கும் சிறுநீரக முழுச்செயலிழப்புக்கும் (total renal failure = TRF) ஆளாகி, இழப்பீடு கோரி மனுக்கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் எல்லாம் நேர்மையான கோரிக்கைகளே. அப்படியிருக்க, 2000 புற்றுநோய் மனுக்கள், 1000 சிறுநீரக முழுச்செயலிழப்பு மனுக்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இழப்பீடு கொடுக்க மறுப்பு...

யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனமும் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமான இழப்பீடு கொடுக்க மறுத்துவருகின்றன. முதலில் நீதிமன்றம் விதித்த 750 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கொடுக்க முடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. அதற்கு எதிராக 7,700 கோடி ரூபா இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வாதாடப்பட்டது. 1989இல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 3,000 சாவுகள், 20,000 பேர் கடினமாகப் பாதிக்கப்பட்டவர்கள், 50,000 பேர் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்று இடப்பட்ட கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய கணக்குப்படி, நச்சுவாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,295. கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் 35,000 பேர். குறைந்த அளவு பாதிக்கப்பட்டோர் 5.27 இலட்சம் பேர்.

எனவே, இழப்பீட்டுத் தொகையாக 7,700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது. இந்த உதவி என்று கிடைக்குமோ என்று காத்திருக்கின்றனர் போபால் மக்கள்.

தூய குடிநீர் வழங்க உச்ச நீதி மன்றம் ஆணை...

2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போப்பால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு சுத்த குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது.போபால் பேரழிவு நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நெடு நாளைய பிரச்சினை...

போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது.

2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றது.

யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோவ் கெமிக்கல்சு நிறுவனம் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப் பொறுப்பில்லை என்று கூறிவருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள் அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்தது.

ஆபத்தான கழிவுப் பொருள்கள்...

போப்பால் பேரழிவால் எழுந்த நச்சுக் கழிவுப் பொருள்கள் மூடப்பட்ட யூனியன் கார்பைடு தளத்தில் இன்றளவும் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அளவு 350 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கழிவுப் பொருள்களை இந்தியாவிலேயே புதைக்காமல், செருமனியின் ஹாம்பர்க் நகருக்குக் கொண்டுசெல்ல ஒரு செருமானிய நிறுவனம் முன்வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விபத்து நடந்து ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப்பின் ஜூலை 3, 2012 இல் இந்திய நடுவண் அமைச்சரவை, அங்கு தேங்கிக் கிடக்கும் 350 டன்கள் நச்சுக் கழிவுப் பொருளைப் பாதுகாப்பாக, வான்வழியாக செருமானிய நிறுவனத்தின் (GIZ) மூலம் அகற்றுவதற்கும் அதற்கான செலவு 25 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளித்தது. இது ஓராண்டு காலத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவானது. ஆகஸ்டு 9, 2012 அன்று, இக்கழிவுகளை 6 மாதங்களுக்குள் அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நடுவண் அரசுக்கும் மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. செப்டம்பர் 17, 2012 இல் அந்த செருமானிய நிறுவனம் இக்கழிவுகளை அகற்ற மறுத்து விட்டது.

இந்தியாவிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை செருமனிக்குக் கொண்டுசென்று புதைத்தால் செருமானிய மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது உடல்நலம் கருதி நச்சுப் பொருள்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்றும் செருமானிய பத்திரிகைகள் பரப்புரை செய்தன.

இந்தியாவுக்குள்ளும் போப்பால் கழிவுகளைத் தம் பகுதியில் புதைக்கக் கூடாது என்று மாநில அரசுகள் கூறிவருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நாம் போராடாவிட்டால், நாளை போபால் போல இன்னொரு தூத்துக்குடி தினமும் வரலாற்றில் இதுபோல நினைவு கூரப்படாமல் மறந்து போகலாம்.

குற்றவாளிகளை இந்திய அரசியலின் ஓட்டைகளே எளிதாகத் தப்பிச் செல்ல விட்டுவிடும்.

மக்களே ஏகாதிபத்தியங்களின் சோதனை எலிகளாக எப்போதும் வதைப்படுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.