29/06/2018

வந்து கொண்டி௫க்கிறது சாகர்மாலா அதை பற்றிய ஒரு சிறு கதை..


அது எல்லா வளங்களும் நிறைந்த அழகிய விவசாய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையில் ஒரு தொழிற்சாலை அமைய இருக்கிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

நிலம் கையகப்படுத்துதலில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்குவது, இரண்டாவது நிலையை எடுத்துச் சொல்லி விவசாயிகளுக்கு ஆசைவார்த்தை காட்டி (உங்களுக்கு வேலைத் தருகிறேன் என்பது உட்பட) நிலங்களை வாங்குவது என இரண்டு வகை உண்டு.

விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் சொன்னபடி தொழிற்சாலையில் வேலைக் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்...

இப்போது அவனுக்குத் தொழிற்சாலையில் 10,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. சரியான சாலை வசதி இல்லாத ஊருக்கு புதிய அகலமான சாலை போடப்படுகிறது. வாகன வசதிகளே இல்லாத ஊருக்கு வாகனங்களும் பேருந்து வசதியும் செய்யப்படுகிறது. ஊரில் கடைகளும், காம்ப்ளக்ஸ்களும் பெருக ஆரம்பிக்கின்றன.

இது எல்லாமே வளர்ச்சியின் அடுத்த கட்டம்தான் என்பது மறுக்க முடியாது. ஆனால், இதற்கு முன்னர் 10 பேருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தவன், 10 ஆயிரத்துக்காகக் கையேந்துகிறான்.

தொழிற்சாலை வேலைக்கு ஆட்கள் வேலைக்கு போவதால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். புதிதாக அமையும் தொழிற்சாலையின் தண்ணீர்த் தேவையால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்.

தொழிற்சாலை வளர்ச்சிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். கிராமமானது விவசாயம் பொய்த்துப்போய் வீழ்ச்சியைச் சந்திக்கும். இதற்காகத் தொழிற்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதில் கேள்வியே தொழிற்சாலையை அமைக்க அதிகமான இடங்கள் இருந்த போதும் வளமான கிராமத்தில் ஏன் நிறுவ வேண்டும் என்பதுதான்...

மேற்கண்ட செயலைத்தான் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களிலும் அரசு முன்னெடுத்துக் கொண்டே இருக்கிறது. பல இடங்களில் சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிக்கக் கூடிய திட்டங்களை அரங்கேற்றியிருக்கிறது, மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக  இன்னொரு புதிய திட்டம் செயல்படுத்துவதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. அதுதான் சாகர்மாலா திட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.