21/06/2018

சட்டமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம்...


தமிழக சட்டமன்றத்தில் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தொலைக்காட்சி நேரலையில் மக்களுக்கு அளிக்க பணம் இல்லாத அரசின் சட்டமன்ற செயல்பாடுகளைக் காண நேரில் செல்வதை தவிர வேறு வழி இல்லாததால் சில முக்கிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் இயக்க நண்பர்கள் பார்வையாளராக கலந்துக்கொண்டனர்.

நேரில் சென்று பார்த்த அனுபவத்தை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டை ஆளும் சட்டமன்றம் இயங்கும் விதம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

எடுத்துக்காட்டாக, சட்டமன்றத்திற்கு பின்னால் உள்ள இராணுவ பயிற்சி மைதானத்திற்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அரசு வாகனம் முதல் மக்கள் பயன்படுத்தும் வாகனம் வரை அனைத்தும் எந்த ஒரு ஒழுங்குமின்றி ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சட்டமன்றத்தை காண வரும் பார்வையாளர்களை, நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களைப்போல கடிகாரம்,மோதிரம்,Belt,சில்லறைக்காசு,காப்பு,வளையல்,அலைப்பேசி என மேலணிந்துள்ள எல்லா பொருட்களையும் அகற்றியப்பிறகே அனுமதிக்கின்றனர். கண்ணாடியும் அணிந்து செல்லக்கூடாது என மறுத்த பேரவை காவலர்கள்,  நீண்ட விவாதத்திற்கு பிறகே அனுமதித்தனர். பேரவை உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவே இத்தனை கெடுபிடிகள் என காரணம் கூறினாலும், அகற்றிய பொருட்களை வைக்க பாதுகாப்பற்ற ஒரு குருவிக்கூண்டு மட்டுமே உள்ளது. இதில் விலைஉயர்ந்த பொருட்களை வைக்கவும் அனுமதி இல்லை. சட்டப்பேரவையை காண வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க சட்டமன்றத்திலேயே இடம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது.

மூன்றாவதாக, பேரவைக்கூட்டத்தை காண வரிசையில் காத்திருக்கும் மக்கள் குடிநீர் அருந்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குடிநீர் எங்கும் இல்லாத காரணத்தால் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் அலுவலத்தில் சென்று குடிநீர் அருந்திவந்தோம்.

நான்காவதாக, பொதுமக்களுக்குத்தான் இத்தனை பிரச்சனை என்றால் பேரவையினுள் அமர்ந்து இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், TNSTC அரசு பேருந்தில் அமர்ந்து பயணம் செய்வது எவ்வளவு நெருக்கடியாக இருக்குமோ அந்த அளவிற்கான நெருக்கடியில் அமர்ந்து உள்ளனர்.

 உலக வங்கியிடம் கடன் பெற்றாவது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நன்கமர்ந்து விவாதிக்க ஒரு புதிய சட்டமன்றத்தை தமிழக அரசு கட்ட பரிசீலிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்திடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1) பாராளுமன்றக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள தேவையான அனுமதி படிவம் பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ளதைப்போல சட்டப்பேரவையைக்காண வரும் பொதுமக்களுக்கான அனுமதி படிவத்தையும் பேரவை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்தல்.

2) சட்டப்பேரவையைக் காண வரும் பொதுமக்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வசதி ஏற்படுத்துதல்.

3) பேரவையைக்காண வரிசையில் நிற்கும் பொதுமக்களும், அமைச்சர்களை காண வரும் பொதுமக்களும் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலையை தவிர்க்க தக்க குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதுதல்.

4) நெரிசலில் சிக்கித்தவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்கு அமர்ந்து பங்கேற்க ஏதுவாக புதிய சட்டமன்றத்தைக்கட்ட கோருதல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.