29/07/2018

சிலுவை யுத்தங்கள் − 4...


இஸ்லாமிய அரசின் பலவீனம்...

ஆசியா ஆப்பிரிக்கா போன்ற தூரப்பிரதேசங்களை உள்ளடக்கிய அப்பாஸிய கிலாபத்தின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த கலீபாக்களின் ஆளுமையின்மை காரணமாக அப்பாஸிய ஆட்சி நலிவுற்றது.

அதாவது ஆதிக்கம் நிறைந்த சில கவர்னர்கள் தமக்கென தனித்தனியாக அரசுகளை நிறுவி அப்பாஸிய ஆட்சியின் சிற்றரசுகளாக செயல்பட்டனர்.

இதனால் மத்திய அரசின் உறுதி குறையலானது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டே அதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் முட்டுக் கட்டைப் போட்டு வந்த கிறித்துவர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் சிலுவை யுத்தத்தின் ஆரம்ப கால கட்டத்தில் அன்றைய இஸ்லாமிய அரசினால் உறுதியான முறையில் எதிர்த்துப் போராட முடியாது போயிற்று.

ஐரோப்பாவில் காணப்பட்ட மோசமான பொருளாதார நிலை...

ஐரோப்பாவில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நில மானிய முறைப் பொருளாதார அமைப்பு காணப்பட்டதால் அங்கு வாழ்ந்த விவசாய ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

வறுமையில் வாடியிருந்த இவர்கள் கிழக்காசிய நாடுகளின் செல்வங்கள் மீது ஆசை கொண்டு இப்போரில் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாது, இஸ்லாத்தின் அறிமுகத்திற்கு முன்னர், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த மத்தியதரைக் கடலிலுள்ள தீவுகளிலும், அதன் தென் கிழக்கு கரையிலுள்ள நாடுகளிலும் இஸ்லாம் அறிமுகமானதால் இப்பகுதிகள் முஸ்லிம்கள் வசமாயின.

அதன் பின்னால் இப்பிரதேசங்களின் வர்த்தகத்துறைகள் முஸ்லிம்கள் கைவசமாகியதால் அப்பிரதேச கிறித்துவ மக்கள் தமது வியாபாரத்திலும் வர்த்தகத்திலும் இழப்புகளைச் சந்தித்தனர்.

சிலுவைப் போரின் மூலம் தாம் இழந்த வர்த்தகத் தொடர்புகளை வெனிஸி, ஜெனீவா, பைஸா போன்ற கிழக்கு நாடுகளுடன் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளலாம் என நினைத்து அவர்கள் இப்போரை ஆதரித்ததோடு அப்போர்களில் பங்கேற்றுக் கொண்டனர்.

"சிலுவைப் போர், வளர்ந்து வந்த இத்தாலிய நகரங்களின் வர்த்தக ஆவலுக்குப் புதியதொரு வழியைத் திறந்து விட்டது"

என, வரலாற்றாசிரியரான James  Hosmer தனது The Jews p:137 எனும் நூலில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

இந்த சந்தர்ப்பங்களைச் சாணக்கியமாக பயன்படுத்திக் கொண்ட சிலுவை வீரா்கள் புதிய புதிய வர்த்தகச் சந்தைகளை ஆரம்பித்ததோடு வியாபார மத்தியஸ்தலங்களையும் ஏற்படுத்தினர்.

இதனால் தான் இந்த வியாபாரிகள் தங்களால் முடிந்த உதவிகளை சிலுவை வீரா்களுக்கு வழங்க முடிந்தது.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.