07/08/2018

ஈரானில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்...


ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் சனிக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக, ஊதியம் இல்லாமலும், சரியான தங்கும் வசதி இல்லாமலும் அவதியடைந்து வந்தனர்.

மேலும் இவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர், அவர்களின் அடையாளஅட்டைகள், கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர், மீனவர்களை மீட்குமாறு அரசிடம் முறையிட்டனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜியிடம் கோரிக்கை விடுத்தார். அதேபோல திமுக எம்.பி. கனிமொழியும், சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து மீனவர்களை மீட்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 21 மீனவர்களும், இந்திய தூதரகம் மூலம் ஈரான் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள்  அனைவரும் சனிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள், மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

நாடு திரும்பிய மீனவர்கள் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியது:

ஆறு மாதங்களுக்கு மேல் உணவு, இருப்பிடம் இல்லாமல் சிக்கித் தவித்த எங்களை பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றனர். நாடு திரும்பிய மீனவர்கள் அவர்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.