07/08/2018

சிலை மோசடி - சசிகலாவின் உறவினர் கவிதா...


சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்..

ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.

சசிகலாவின் உறவினர் என்பதால்தான்
தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது..

யார் இந்த கவிதா?

திருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தையே அதிரச் செய்த கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர்.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு..

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது.

1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலையானார் ஜெயலலிதா.

இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது விடாமுயற்சியும் அளப்பறியது.

குடும்பப் பின்னணி...

கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழி பெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர்.

அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.கவிலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது.

அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்று வரக்கூடியவராக இருந்தார் சரவணன். கவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.!

தி.மு.க., அ.தி.மு.க உறவு...

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது.

அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டது.

அரசுத்துறையில் அசுர வளர்ச்சி.. இப்போது புரிந்திருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.