07/08/2018

அனாதை சடலங்கள் அடக்கம்… அசத்தும் உமர்அலி...


உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உமர் அலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. எங்கு அனாதை சடலங்கள் கிடந்தாலும், போலீசார் தொடர்புகொள்வது உமர்அலியைத்தான். காவல்துறை மற்றும் அரசு மருத்துவர்களிடமிருந்து முறைப்படி என சான்றிதழ் பெற்று, இவரே உரிய முறையில் அனாதை சடலங்களை அடக்கம் செய்து வருகிறார்.

கடந்த 28 ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 930 அனாதை சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார்.

உமர்அலி, பெரிய தொழிலதிபரோ, சேவை நிறுவன பிரதிநிதியோ அல்ல. மில்களில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 1990ம் ஆண்டு திருமூர்த்தி அணையில் அனாதை பிணம் ஒன்று ஒதுங்கியதை பார்த்தார். பலரும் பரிதாபம் காட்டி ஒதுங்கி சென்றபோது, உமர் அலி, தளி போலீசாரின் அனுமதியுடன் அந்த சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, உரிய சான்று பெற்று, தனது சொந்த செலவில் அடக்கம் செய்தார். இதுவே, இவர் அடக்கம் செய்த முதல் அனாதை சடலம். அன்று முதல் இவரது சேவை பயணம் தொடர்கிறது. 

உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், அவினாசி, மங்கலம், அவினாசிபாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், ஆனைமலை, குடிமங்கலம், கோமங்கலம், மடத்துக்குளம், காங்கேயம், குண்டடம், நெகமம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறை அழைப்பின்பேரில் அனாதை சடலங்களை அடக்கம் செய்து வருகிறார். இதுதவிர, சாலை ஓரத்தில் சுற்றித்திரியும் விலங்குகள் அடிபட்டு இறந்தால், அதையும் மீட்டு, உரிய துறை அதிகாரிகள் அனுமதியுடன் அடக்கம் செய்து வருகிறார். இதுவரை 230க்கும் மேற்பட்ட விலங்குகளை அடக்கம் செய்துள்ளார்.

 இவரது சேவையை பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விஜயகுமார், ராஜேந்திரன், காந்திராஜன், சீமா அகர்வால்,  ரவி, சிவனாண்டி, பாரி உள்பட பலர் சான்று மற்றும் விருது வழங்கியுள்ளனர். இவர், மானுப்பட்டி கிராமத்தில்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.

இச்சேவையை பாராட்டி அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்  வழங்கியுள்ளது. 

தனது சேவை பற்றி உமர்அலி கூறியதாவது...

ஒரு அனாதை சடலத்தை அடக்கம் செய்ய, வண்டி வாடகை, குழி தோண்டுவது, மாலை, துணி, சென்ட், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் இதரவு செலவுகளுக்கு ₹5 ஆயிரம் வரை செலவாகிறது. இறந்தவர்களின் மதம் தெரிந்தால் அந்த மத முறைப்படி அடக்கம் செய்வேன். எனது சேவையை பாராட்டி, இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், எனது தொழிலுக்கு உதவியாக இருக்கின்றன. பழைய இரும்பு பொருட்களை என்னிடமே விற்கின்றனர். ஆரம்பத்தில் எனது சொந்த பணத்தை மட்டும் செலவு செய்தேன். இப்போது பல நல்ல உள்ளங்கள் பண உதவி செய்கிறார்கள். அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்படுத்தி, அன்னை தெரசா பிறந்த நாள் அன்று ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறேன். தற்போது ஈமச்சடங்கு செலவுகளை அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் செய்து வருகிறோம்.

மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம், தினமும் உணவு, டீ, பிஸ்கட் வழங்குகிறோம். 500 பேருக்கு மொட்டையடித்து, முடிவெட்டி, துணிகளை மாற்றி உள்ளோம். அனாதை சடலங்களை எடுத்துச்செல்ல, பொள்ளாச்சி ஈதல் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் இரண்டு ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளனர்.  சமுதாயத்துக்கு நான் பெரியதாக எதையும் செய்து  விடவில்லை. சக மனிதனின் சடலம் கேட்பாரற்று கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.  அதனால், இந்த சேவையை செய்து வருகிறேன். யாரும்  அனாதையாக இறக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். இவ்வாறு உமர்அலி கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.