மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையின் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இடமன் அருகே சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. கடந்த சில தினங்களாகப் பெய்யும் மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதனால், அனைத்து அணைகளும் திறக்கப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதியான செங்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தென்மலைப் பகுதியில் கனமழை பெய்கிறது. அதனால், கொல்லத்தில் இருந்து வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கல்லாடா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்லாடா அணை திறக்கப்பட்டதால், அந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
அதனால், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இடமன் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவு உருவானது. எனவே, அந்தப் பகுதியில் கனரக வாகன போக்குவரத்து முதலில் நிறுத்தப்பட்டது. நிலைமை மோசம் அடைந்ததால், அந்தச் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லாடா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொல்லம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கேரளாவில் இருந்து செங்கோட்டைக்கு வரக்கூடிய சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டன.
அதேபோல, கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய வாகனங்களும் தென்மலை அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரடைந்ததும் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் கேரள காவல்துறையினர் தெரிவித்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.