இந்தியாவிற்கு 3 நாட்கள் அரசு முறை பயணமாக வந்து சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்து இலங்கைப் பிரதமரிடம் இந்தியத் தரப்பில் எந்த அழுத்தமும் அளிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிங்களக் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தலா 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன். இதைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.
இத்தகைய சூழலில் தில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய, இலங்கை பிரதமர்கள் இடையிலான சந்திப்பில், இலங்கை சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்த பேச்சுக்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தியா, இலங்கை இடையிலான பேச்சுக்களின் போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமே மீனவர் பிரச்சினை தான். ஆனால், அது குறித்து பேசப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்ததும், அவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதும் இரு தரப்பு உடன்பாடுகளை மீறிய செயலாகும். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக டெல்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்திய&இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு இருக்கும் போது தமிழக மீனவர்களுக்கு, தலா 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை மத்திய அரசு தான் முதலில் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாததைப் பார்க்கும் போது, தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய குடிமக்களாகவே மத்திய அரசு கருதவில்லையோ? என்ற ஐயம் தான் எழுகிறது.
கடந்த காலங்களில் இலங்கை அதிபரோ, பிரதமரோ இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இம்முறை இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, நல்லெண்ண அடிப்படையில் எந்த மீனவரும் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால், இவை எதையுமே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற உண்மை கசக்கிறது; தமிழக மீனவர்கள் விவகாரத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது.
இலங்கை அரசின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.