12/12/2018

நீட் தேர்வு மறைக்கப்பட்ட உண்மைகள்...


வெறும் 7 மாணவர்களுக்காக ரூ.20 கோடியை செலவு செய்த பள்ளி கல்வித்துறை...

191 பேர் அல்ல 611 பேர்...

நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை ஈஸ்வரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளார். அதன் மூலம், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 20 பேருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.

அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கும் வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 தமிழக மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஓராண்டு பயிற்சிக்கு பின் நீட் தேர்வு எழுதியவர்களில், ஆயிரத்து 834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

மொத்தமுள்ள மூவாயிரத்து 456 இடங்களில் இது 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும். நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.