11/04/2017

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக நாங்கள் வீர மரணம் அடையவும் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்...


கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டம் இன்று 28-ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் போராட்டக் களத்துக்கு வந்த டெல்லி போலீஸார் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அய்யாகண்ணு தலைமையில் 10 விவசாயிகள் ஜீப்பில் ஏறினர்.

பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களில் அய்யாகண்ணுவை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உள்ளே சென்றதும் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

இதைக் கண்டித்து முழு நிர்வாண போராட்டம் மேற்கொண்ட 7 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

பிரதமரை சந்திக்க அழைத்து செல்வதாக கூறிவிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதிலேயே போலீஸார் குறியாக உள்ளதாக அய்யாகண்ணு குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பிரதமரை சந்திப்பதாக அழைத்து சென்று எங்களை மத்திய அரசு நிர்வாணமாக்கி விட்டது.

கோரிக்கைகளுக்காக ஜந்தர் மந்தரிலேயே வீரமரணம் அடையவும் விவசாயிகள் தயாராக உள்ளோம்.

எங்கள் மானம் போய்விட்டது, பிரதமர் சந்திக்கவில்லை, எங்கள் உயிர் போனால் தான் எங்களை சந்திப்பார் என்றால் அதற்கும் நாங்கள் தயார்.

எங்களது போராட்டத்தை பிரதமர் மோடி கேட்காதது ஏன்? நாங்கள் தீண்டத்தகாதவர்களா? இந்தியாவை விவசாய நாடு என்று இதற்கு மேல் சொல்ல முடியுமா?

விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிடுவது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவமானம் இல்லையா ?

பிரதமர் அழைத்து பேசாததால் நிர்வாணமாக போராட்டம் நடத்தினோம்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்க பார்க்கிறதா மத்திய அரசு.

கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை.

இதன் பிறகாவது எங்களை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.