10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 3...


வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்...
                             
பாடல் 347-இல் ஐயாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல் 349- அத்தாநான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல்-350-அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்...

பாடல் 377-சித்தியெலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்....

இப்பாடல்களில் இறந்தவர்களை மீண்டும் உயிர்பித்து எழுப்புதல் தொடர்பான விஷயத்தை வேண்டுகோள் வைக்கும் வள்ளலாரின் கருத்தை வகையாய் கண்டுணர வேண்டும.

வாய்மை கொண்ட காலமாய் அருட்சோதியின் ஆற்றல் கொண்ட காலமாய் உலகத்து உயிர்கள் துன்பம் துய்க்காத காலமாய் எவ்வுயிரும் இன்பம் கொள்ளும் காலமாய் இதுவரை உலகத்தில் காணாத அரிய பெரிய வியத்தகு காட்சிகள் கண்டுக்கொள்ளும் காலமாய் இறவா வரம் தரும் காலமாய், இறந்து போனவர்களை தெம்பும் திடமாய் மீண்டும் எழுப்பி நிற்க செய்யும் காலமாய், ஜோதி அருள் பெற்ற புன்னிய ஞானசபை இறுதியில் தோன்றும் விதமாய் மனஒருமையும் ஒழுக்க ஒற்றுமையும் கொண்ட உலகமாய் அருள் ஒழுக்கத்தை கடைபிடித்து எய்தி வாழும் உலகமாய், பிரிந்து சென்ற உயிரை மீள்வதற்கு மீண்டும் எழுப்பி நிற்க உள்ள நாளாய் சிறந்த ஒரு நாளாய் சிறப்பாய் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்ற இந்த பாடல்கள் ஒவ்வொரு பாடலிலும் செத்தாரை எழுப்பும் நாளைத்தான் திடமாய் குறித்து நிற்கிறார்.

பாடல்-742 இச்சையெலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்...

பாடல்-743 சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்...

பாடல்-744 தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்...

இந்த மூன்று பாடல்களும் இறந்தவர்கள் எவராயிருந்தாலும் எழுப்பும் ஆற்றலைக் கொண்டவன் தான் இறைவன் எனவும் சாகாவரம் அளிக்கும் தனித்தன்மை கொண்டு ஒரு சுத்த சன்மார்க்க சபையிலே மட்டும் இருக்கும் தெய்வமாய் உலகமெங்கும் சிறப்புற விளங்கும் தெய்வமாய் ஒரு சிறிய தமிழ் திருச்சபையிலே தோன்றும் தெய்வமாய் மாண்டாரை எழுப்பும் தெய்வமாய் இந்த உலகத்தை ஆண்டுநின்றோர் அனைவரையும் ஆண்டுநிற்கும் அருட்பெருஞ்சோதியாய் தமிழ் சிற்சபையில் விளங்கும் தெய்வமாய் சித்தரிக்கிறார்.

பாடல் 998-உயத்திடம் அறியாது இறந்தவர் தமைஇவ்...

இந்த உலகிலே இறந்துபோனவரை மீண்டும் அப்படியே உயிர்ப் பெற்று வியக்கும் வகையில் வரச்செய்யும் ஓர் மெய்யறிவு ஆற்றலும் ஊழிகாலத்தில் சாகாவரமும் பெற்று விளங்கும் திருச்சபையை வியந்து கூறுகிறார்.

பாடல்-1021செத்தார் எழுக சிவமே பொருளென்று....

இறுதி காலத்தில் செத்தவர்களை எழுப்பும் திருச்சபை சிவத்தையே ஏகமென்று இத்தாரணியில் இருந்து ஒளிர்வதுடன் அத்திருச்சபையின் சுத்த சன்மார்க்க நெறிமுறை ஒன்று மட்டுமே தழைத்து நிற்கும்.

தவறான கருத்துகளை உபதேசிக்கும் மார்க்கங்களும் இறைமறுப்பு வாதங்களை சொல்லி நிற்கும் மார்க்கங்களும் துன்மார்க்கமாய் உலகில் தொலைந்து போகும் . இந்த புதிய திருச்சபை மார்க்க வழிமுறை ஒன்றே எங்கும் ஒளிரும் என்று கூறியிருப்பதை பாருங்கள்.

பாடல்-1022 செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவர...

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர சித்தம் வைத்து செய்கின்ற சத்திய சன்மார்க்க சங்கத் தலைவனே நான் உபதேசித்த என் மார்க்கமும் இறுதியில் வரும் உன் மார்க்கத்தை சார்ந்தே நிற்கிறது என்று சொல்வதிலிருந்தே இந்த ஆறாம் திருமுறை வடலூர் வள்ளலார் திருச்சபைக்காக சொல்லவில்லை. இறுதியில் வரும் புதிய தமிழ் திருச்சபைக்கே உரித்தானது என்று பொருள்படும் நிலையில் இருப்பதை கவனியுங்கள்.

பாடல்-1197 ஒத்தாரை யும் இழிந் தாரையும்   நேர்கண் டுவக்கஒரு...

இறுதியில் செத்தாரை மீட்டெடுக்கும் இத்திருச்சபை மேதினியில் தன்னை அன்டிவந்த ஏழை திருச்சபை மக்களுக்கு அமுதம் கொடுத்து மகிழ்விக்கும் பல திருவிளையாடல்களை செய்து வியக்க வைக்கும் திருச்சபையாய் விளங்கும் என்று குறிப்பிட்டதை காண்க.

பாடல்-1198 எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல்லாமும்வல்ல...

ஆகாச தத்துவத்தை தன்னுள்ளே கொண்ட திருச்சபையில் அதாவது அண்டமே பிண்டம் என்ற கோட்பாட்டை கொண்டு விளங்கும் திருச்சபையாய் எழுகின்ற அத்திருச்சபை விண்ணக உலகங்களையும் மண்ணக உலகங்களையும் ஆண்டு நிற்கின்ற திருச்சபையாய் வானத்திலிருந்து புனிதர்கள் வந்து வானுலக மக்கள் என இவர்கள் வந்து தொழுது நிற்கும் திருச்சபையாய் செத்தவர்களை எழுப்பக் கூடிய ஆற்றல் உள்ள திருச்சபையாய் இருக்கும் என்று அவர் அறுதியிட்டு கூறுவதை சிந்தையில் கொள்க.

பாடல் 1321-செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னம் சிரித்தெழவே...

செத்தார் எழுக என சிந்தை செய்யும் முன்னே அவர்கள் சிரித்து எழுகின்ற ஆற்றலை இறுதியில் வரும் இறையாளனுக்கு கொடுத்த அருட்பெருஞ்சோதியே என சொல்லியிருப்பதை கண்டு உணர்க.

பாடல் 1519-செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு...

செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் என்பது எதனால் முடியும் என கேட்கும் உங்களுக்கு இறைசித்து விளையாடும்  இறைவன் அருட்பெருஞ்சோதியால் முடியும் இது சத்தியம் என இறுதிசபை தன் ஆற்றலோடு செய்யும் செயலை சிறப்பாய் வழியுறுத்தி சொல்வதை பாருங்கள்.

பாடல் 1520- இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகவெனில்...

தன்னை நாடி வந்தவர்க்கு அவர் மனவிருப்பப்படி செத்தவரையெல்லாம் உயிர் பெற்று எழுக என்று சொல்லும் போது செத்தவர்கள், நாட்டினர் அனைவரும் வியந்து மகிழும்படி எழுந்திருப்பார்கள் என்று கூறிய பாடலின் பொருளை பாங்காய் உணர்க.

பாடல் 1521-யான்புரிதல் வேண்டும்கொல்! இவ்வுலகில் செத்தாரை...

இவ்வுலகில் செத்தாரை அதே உடம்பில் அப்படியே உயிர்பித்து எழுப்பும் ஆற்றல் இறுதியில் வரும் இறைவனின் நல்லருளின் துணையாலே விமலன் போர்த்திருக்கும் ஒரு போர்வை அந்த எழுப்புதலை செய்யும் ஆற்றல் கொண்டது. இந்த இடத்தில் அவர்மேல் உள்ள துணிக்கே இவ்வளவு சக்தி இருப்பதாக சொல்லுகின்றபோது அவரின் அளப்பரிய சக்தியை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் என்ற பொருளிலே புகன்று உரைக்கின்றார்.

பாடல் 1522-என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக...

உலகில் செத்தவர்களை எழுப்பும் செயலை கண்டு உலகமே அதிசயம் என்று ஆடி நிற்கின்ற நிலையில் அந்த திருச்சபையிலே அவருடைய திருப்பார்வை பெற்றவர்கள் என்றும் அழியாத உடலுக்கு மாறி நிற்கிறார்கள்.

பாடல் 1523-ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை...

இப்படி செத்தவனை எழுப்பும் திருச்சபையை திடமாய் சுட்டிக்காட்டும் வள்ளலார் அவர்கள் தன் மக்களைப் பார்த்து ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றையும் நாடாதீர் (உருவ வழிபாடுகளை நாடி செல்லாதீர்) இப்படிபட்ட தழிழ் திருச்சபை நான் கொண்ட இறைதத்துவத்தை சோதி தத்துவத்தை கொண்ட அந்த திருச்சபையை நாடி ஓடி சார்ந்து நில்லுங்கள்.இதை விரைந்து செய்யுங்கள் என செத்தாரை எழுப்பும் திருச்சபையை நோக்கி தன் மக்களையும் சென்று சேர்க என்று சொல்லும் விதத்தை ரசித்துப்பாருங்கள்.

பாடல் 1524 மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர்! வாய்மை இது...

இப்படி செத்தாரை எழுப்பும் தமிழ் திருச்சபை பூமியில் இருக்கின்ற அனைத்து மத மார்க்கத் தத்துவத்தையெல்லாம் அழித்து ஒரேமார்க்கம் ஒரேதத்துவம் அந்த திருச்சபையின் தத்துவமே அந்த திருச்சபையின் மார்க்கமே என்று ஆவதால் சத்தியமாய் சொல்கிறேன் அந்த இறுதி திருச்சபையின் மார்க்கம் நன்மார்க்கமாய் இருப்பதால் அந்த சன்மார்க்க சபையை சார்ந்திடுவீர் விரைந்து என்று கூறுவதை கவனியுங்கள்.

பாடல் 1525- இந்நாளே கண்டீர் இறந்தோர் எழுகின்ற...

அருட்பெருஞ்சோதியாகிய இறைவன் மீது சத்தியமாக சொல்கிறேன். உலக மாந்தர்களே இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்றுயெழ எழுப்புகின்ற வியப்பு நாள் இந்நாளே ஆகும் என காண்பீர். அந்நாளே அந்த திருச்சபையின் அருட்பெருஞ்சோதியாகிய கடவுளை எல்லோரும் சென்று அடைகின்ற நாளாகும்.

பாடல் 1537-விரைந்துவிரைந்து அடைந்திடுமின் மேதனீயீர்.. இங்கே...

கரைந்து கரைந்து மனமுருகி கண்களில் நீர்பெருகி கருணையுடன் நீ நாடி அந்த இறுதி தழிழ் சபையை விரைந்து நாடினால் நரை திரை வந்து தள்ளாத வயதில் தள்ளாடி நிற்பவரும் தன் இளமை பருவத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளவும். செத்தவர்கள் எழுப்பிடவும் எல்லா சித்தையும் கண்டுணரவும் கேட்டவரம் பெற்று நிற்கவும் அமையும் திருச்சபை அந்த செத்தாரை எழுப்பும் திருச்சபையே இறைசபையாய் இருப்பதால் உண்மை உரைக்கின்றேன்.விரைந்து அடைந்திடு அந்த நேரம் இந்த நேரமே இறவா வரத்தை பெறுங்கள்.

பாடல் 1538- களித்துலகில் அளவிகந்த காலஉல கெல்லாம்...

உலகத்து மக்களே செத்தவரை எழுப்புகின்ற நல்ல தெளிவான நேரம் இதுவே. உண்மை என்று எண்ணுங்கள் நான் எதையும் ஒழித்து மறைத்து சொல்பவன் அல்லன். வாய்ப்பறை அறைந்து முழுங்கி சொல்லுவேன் சிறிதளவும் அஞ்சமாட்டேன். உள்ளதை உள்ளப்படி உணர்ந்தே சொல்லுகிறேன் உலகத்து மக்களே உலகில் உள்ள உயிர்களெல்லாம் களிப்படைந்து இருக்கவேண்டிய தருணம் இதுவே.இதுவே தெளிவான உண்மை வேறு எந்த நேரமோ என்று நீங்கள் கருதி சொல்லாதீர்கள். எனவே இறுதிச்சபைக்காக இவர் இறக்கி வைத்த கருத்துக்கள் மிக விரைவில் நடப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது.

பாடல் 1559-இறந்தவர்கள் பலருமிங்கே எழுகின்ற...

இறந்தவர்கள் எல்லாம் இத்தழிழ் திருச்சபையால் எழும்புகின்ற நேரம் இதுவே என்ற உண்மையாகிய அறம் செழிக்க உரைக்கின்ற சொற்கள். இத்தனையும் நான் கூறிய சொற்கள் அன்று. அச்சபையின் அருட்சோதி திருவாய்மொழி என சுட்டிக்காட்டி நிற்பதை பாருங்கள்.

பாடல் 1568- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின....

உலகங்கள் யாவும் மகிழ்ச்சியில் ஒளி விளக்கம் பெற்றன. துன்புற்று நலிந்து இறந்தவர்கள் துன்பம் அற்று உயிர் பெற்று தோன்றும் போது அதைக் கண்டுணர்ந்த அந்த திருச்சபை மக்கள் அன்பு பொங்கி ஆடியும் பாடியும் கழித்தனர் என்ற பாடலை கவனிக்கின்ற போது இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்பும் முதல் தருணம் இறைவன் இருக்கும் அந்த திருச்சபையிலே தான் நடக்கிறது. எனவே உலக மக்களில் இறந்தவர்கள் எழுப்பப்படுவதற்கு முன்பாக முதலில் எழுப்பப்படுபவர்கள் அந்த இறுதி சபையில் இறந்து போனவர்களே என எண்ணத்தோன்றுகிறது அல்லவா.

பாடல் 1572-விடம்பெற்ற உயிரெலாம் விடமற்று வாழ்ந்தன...

நச்சுத் தன்மை கொண்ட மனிதர் முதற்கொண்டு ஜீவராசிகள் வரை அந்த திருச்சபையால் விடமற்று வாழ்வர். அறியாமை என்னும் இருளில் மூழ்கிய மனிதர்கள் (இறைமறுப்பு வாதம் கொண்ட அனைத்து மதங்களும் மார்க்கங்களும் கம்யூனிஸம் உட்பட,  இறைவன் அல்லாதவற்றை இறைவன் என்று வழிபட்டவர்கள் உட்பட) அறிவு ஒளியை அத்திருச்சபையால் பெற்று வெளிச்சத்தில் தெளிவாக வாழத் தலைப்படுவர் என்ற பாடலின் கருத்தின் உட்பொருளை கவனமாய் சிந்தையில் கொள்க.

பாடல் 1573-அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்...

இப்படி அருளாட்சி செய்யும் செத்தாரை எழுப்புகின்ற இறுதி திருச்சபை அண்டத்தையே தன் செங்கோல் செலுத்தி ஆண்டு நிற்கும். மக்கள் வாழ்க்கை ஓங்கின. குறையெல்லாம் தீர்ந்தன . உணவு பொருட்களும் பிற பண்டங்களும் குறையின்றி கிடைத்தன . அன்பும் அறமும் செழித்து ஒங்கின. எனவே இறுதியில் எழும்பும் இந்த இறைச்சபை ஏகாதிபத்திய இறைக்கொள்கையை நிலைநாட்டி ஒர் அறத்தை கொண்ட உத்தம அரசாய் இருக்கிறது என்பதை வள்ளலாரின் தீர்க்கதரிசன இப்பாடலில் காணமுடிகிறது.

பாடல் 1574-குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன.....

இறந்த பிணமான உடல்களெல்லாம் மீண்டும் உயிர்ப்பெற்று எழுச்சியோடு இனிதே வாழச் செய்யும் ஆற்றலைக் கொண்ட இறுதி திருச்சபையால், எல்லா  நாட்டு மக்களிடத்தில் அறப்பண்புகளும் அறசாலைகளும் செழித்து பசி கொடுமை நீங்கி களவு கொள்ளை கொலை ஆகிய குற்றங்கள் எல்லாம் அற்றுபோக எங்கும் இல்லறம் போற்றும் நல்லற திருமணங்கள் நிகழ்ந்து திகழ்ந்து தொழில்வளம் பொருள்வளம் விளைந்து வறுமையின்றி மக்கள் வாழ்வர் என்ற உயரிய கோட்பாட்டை கொண்டு நிற்குமாறு இந்த இறுதி திருச்சபை அரசாட்சி செய்கிறது என்ற அற்புதத்தை அழகுபட சொல்லியிருப்பதை பாருங்கள்.

பாடல்1669-வினைத்தடைதீர்த்து எனையாண்ட மெய்யன்மணிப் பொதுவில்...

இப்பாடலில் இந்த இறுதி திருச்சபையின்ஆற்றலால் அதன் தலைவன் விமலன் செத்தவர்கள் எல்லாரும் திரும்புக என நினைத்தவுடன் எதிர் வந்து நிற்பர்கண்டாய் என சொல்வதிலிருந்து செத்தவர்கள் எழுந்திருக்கும் நாள் பூமிக்கு நெருங்கி வந்துவிட்டது என்று தோன்றுகிறது அல்லவா.

பாடல் 1706-செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்...

இறுதி திருச்சபையில் செத்தார் எழுந்தனர் என்ற செய்தி கேட்கின்ற நாள் பூமியில் சுத்த சன்மார்க்கம் சிறந்த நாள். அச்சபை சாகாவரம் இத்தரணியிலே கொடுத்து நிற்க என்று பாடும் பாடலில் இறந்தோரை உயிர்ப்பிக்கின்ற செயலை சுட்டிக்காட்டுவதை பாருங்கள்.

பாடல் 1987-சிவமே பொருளென்று அறிவால் அறிந்தேன்...

இப்பாடலில் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் என்ற வரிகள் இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றதை குறித்து சொல்வதை காண்க.

பாடல் 1988-துஞ்சாத நிலையொன்று சுத்தசன் மார்க்கச்....

இப்படி இறந்தாரை எழுப்பும் சுத்தசன்மார்க்கம் என்ற திருச்சபையில் இறப்படையாத ஒர் ஒப்பற்ற நிலை அங்கு உண்டு . அதை வார்த்தையாலே அளந்து வர்ணிக்க இயலாது என்று குறிப்பிட்ட பாடலின் கருத்தை கண்டுணர்க.

பாடல் 1989-இப்படிபட்ட சன்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் என்று சொல்வதும் , பாடல் 1990-இல் பற்பல சித்திகள் செய்யும் உத்தம ஞானபதி பூமியிலும் வானத்திலும் பற்பல காலங்கள் விதி செய்து நிற்பதும் அந்த அதிசயம் எல்லோரும் பார்க்கும்படி இருப்பதும் என்று  சொல்வதை உற்று நோக்கவும்.

பாடல் 2010-என்னைத் தானாக்கும் மருந்து-இங்கே.....

இறுதி காலத்தில் இத்தனை அற்புதங்களைச் செய்யும் திருச்சபை முப்பூ என்ற ஒரு அற்புத மருந்தைக் கொண்டு விளங்கும் அம்மருந்தே ஆண்டவனின் அரிய அரியாசனமாக இருக்கும். அம்மருந்தே அந்த சபையின் விமலனை இறைவனின் அந்தஸ்த்திற்கு உயர்த்தும் மருந்து.  இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து. என்று சொல்வதிலிருந்தே அச்சபையில் பண்டுத்தொட்டு பாரினில் சொல்லிவந்த முப்பூ மருந்து ஒப்புயர்வு அற்றதாய் இருக்கும் என ஊகிக்கமுடிகிறது.

பாடல் 2044-என்னைத் தானாக்கிய சோதி...

இப்பாடலிலும் இறுதி சபையாளன் விமலனை இறை அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுவதும் இறந்தாரையெல்லாம் எழுப்புவதும் அருட்பொருஞ்சோதி இறைவன் என சொன்னதிலிருந்தே முன் சொன்ன பாடலில் உள்ள முப்பூவில் அமர்ந்த சோதியோ இவைகளை செய்கிறார் என்று எண்ண வேண்டியிருக்கிறது எனவே இப்பாடலின் உட்பொருளை நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு ஏதுவாய் இருப்பதை காணுங்கள்.

பாடல் 2080 -எத்தாலும் ஆகாதே அம்மா-என்றே....

எவராலும் செய்ய முடியாது என உலகில் இயம்புதல் சும்மா. செத்தாரை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்புதலை பாரீர் என இறுதி திருச்சபையையும் அதில் இருக்கும் இறைவன் அருட்பெருஞ்சோதியையும் கூறி நிற்பதை பார்கின்றபோது செத்தார் எழுகின்ற திருநாள் இதோ வருவது உண்மை உண்மை என சத்தியம் உரைக்கச் செய்கிறது.

பாடல்2171- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது....

இப்பாடலில் செத்தார் எழுகின்ற திருநாள் உலகத்தில் வந்தவுடன் இறைநெறி ஒன்றே எங்கும் தலையெடுத்து ஒங்குகிறது இத்தாரணியில். இப்படி அண்டசராசரமே ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் நிற்கின்றபோது இறவாத வரத்தையும் பெற்று மரணம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கின்றபோது இறைமறுப்பு வாதங்கள் கொண்ட தத்துவங்களும் மார்க்கங்களும் மதங்களும் பலதெய்வங்களை வழிபடும் கொள்கைகளும் தத்துவங்களும் மார்க்கங்களும் மதங்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவதும் இறைவனின் திருமறை ஒன்றே உலகை நிறைத்து நிற்பதும் திண்ணம் என்ற சத்தியம் தெளிவாகிறது அல்லவா.

பாடல் 2236- அப்பர்வரு கின்றாரென்று சின்னம்பிடி....

இப்பாடலில் சின்னம்பிடி (சிறிய எக்காளம் போன்ற இசைக்கருவி) என்ற சொல்லை வைத்து செத்தாரை எழுப்புகின்ற வியத்தகு செயலை புரிகின்ற சன்மார்க்க வாழ்வு செம்பொற் சோதியாக செப்ப நிலை பெறுகிறது என்று சொன்னதிலிருந்து செத்தார் எழுப்பபப்படுவார் என்ற கருத்து மெய்பட்டு நிற்கிறது.

பாடல் 2241- சித்தாடு கின்றாரென்று சின்னம்பிடி....

இப்பாடாலில் செத்தார் எழுவார் என்று    சின்னம்பிடி இந்த தாரணியில்.  இதுவே தருணம் என்று சின்னம்பிடி. எனவே இறுதி திருச்சபை தழிழ்ச் சபை எழுகின்ற நேரம் வருகின்ற பொழுது முதலில் அச்சபையிலே செத்தவர்கள் எழுவார்கள் என்றும் அத்தருணம் இத்தருணம் என சொல்லிநிற்கும் பாடலில் உள்ள இக்கருத்து தலைப்பிற்கான பொருத்தமான பாடலாய் இருப்பதை காண்க.

பாடல் 2547-ஐயன் அருள் வருகின்ற தருணமிது கண்டீர்.... 

சத்தியவான் வார்த்தையாக நான் உரைக்கின்றேன் சந்தேகம் இல்லாமல் சந்தோஷம் கொள்வாய். எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி எய்துகின்ற தினமாம். அந்த தினத்திலிருந்து இனிவரும் தினங்களெல்லாம் இன்பமுறும் தினங்களாய் இந்த இறைவனின் சன்மார்க்கம் பூமி எங்கும் துவங்கும் நாளாய், பூமி தூய்மையுறும் நாளாய் இருப்பதோடு, விமலனைப் பார்த்து இறைவாக்காய் இவர் உரைக்கும் வார்த்தை, நீ உரைத்த சொல்லனைத்தும் பலிக்கும். செத்தவர்கள் எழுந்து பூமியில் திரிந்து மகிழ்ந்திருப்பர்.

இறையரசு செங்கோல் எங்கும் செல்லும் காலம் இனிதே வந்தது என சொல்லும் கருத்தை ஆழ்ந்து பார்க்கின்றபோது  இறுதியில் வரும் சிறிய சுத்த சன்மார்க்கத் திருச்சபை சபையின் விமலனோடு அண்டசராசரத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமையோடு இறையரசு பூமியில் இனிதே வரும் தருணம் நெருங்கிவிட்டது என்பது மட்டுமல்ல.

இறந்தோர் மீண்டும் உயிர்பெற்று எழுவது திண்ணம் திண்ணம் இது சத்தியம் என உரைக்கச் சொல்லுகிறது அல்லவா உள்ளுணர்வு...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.