28/03/2018

இயற்கை வாழ்வியல் முறை...


சித்த மருத்துவத்தில் சித்த உணவியல் துறையைத் துவங்கி அதை முழுமையாகத் தமிழ் சமூகத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு பெரிய முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறேன். ஏன் என்றால்  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தை வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்துதான் நாகரீகமாக இருந்தாலும் சரி, உணவுக் கலாச்சாரமாக இருந்தாலும் சரி உலகம் முழுக்க எடுத்துச் சென்றதற்கான மிகப்பெரிய ஆதாரங்கள் உள்ளது. ஆக இந்த உணவு சார்ந்த கலாச்சாரம் உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில் தான் இருக்கிறது. அதற்கான ஆதாரம், எட்டுத்தொகை படித்தாலும் சரி, பத்துப்பாட்டு, கலித்தொகை படித்தாலும் சரி, உள்ளது. எல்லாவற்றிலும் பார்க்கும் பொழுது உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வு தமிழர்களுடைய சங்ககால இலக்கியங்களில் இருக்கிறதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.

ஆக தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையில்  முழுமையாக இருந்து வாழ்ந்தார்கள். தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தில், சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. சித்தர்கள் “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய தண்ணீருக்கு என்ன குணம்? பாலுக்கு என்ன குணம்? பருப்புக்கு என்ன குணம்? அதே போல அரிசிக்கு என்ன குணம்? அரிசியில் எத்தனை வகை இருக்கிறது? பாலில் எத்தனை வகை இருக்கிறது? வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன குணம்? பசும்பாலுக்கு என்ன குணம்? காராம்பசு பாலுக்கு என்ன குணம்? எருமைப்பாலுக்கு என்ன குணம்? என்று  ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என்ற முறைகள் எல்லாம் தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.

அப்படியெல்லாம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. உணவே மருந்து மருந்தே உணவு என்று இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உணவே மருந்து, உணவே நச்சு என்ற கோட்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? ஏன் இந்த உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் இங்கு உண்டாயிற்று? என்பதை எங்களுடைய ஆய்வில் எடுத்து ஒன்றொன்றாகச் செய்து கொண்டிருக்கிறோம். ஆக உணவை எவ்வாறு மருந்தாக மாற்றுவது? அதை மக்களுக்கு பயிற்றுவிப்பதற்காகத்தான் சித்தர்களால் அருளப்பட்ட “சித்த உணவியல்” துறையை சிறிது வேகப்படுத்தவேண்டும் என்பதற்காக தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவ சங்கத்தை ஆரம்பித்து அதற்குத் தலைவராக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சிறு தானியங்களை உபயோகப்படுத்தும் பழக்கம் எல்லாத்தட்டு மக்களிடையுமே அப்படியே இருந்திருக்கிறது. அதாவது ஆடி, பொங்கல், தீபாவளி  போன்ற தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கிகல் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவுமே வேரூன்றக்கூடிய காலகட்டம் வந்தது. ஆக பாரம்பரிய சிறுதானிய உணவுகளைத் தினசரி பயன்படுத்தும் போது நோயின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது.

அரிசியை தினசரி உணவாகவும், அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி, தோசையை தினசரி உணவாக தமிழர்கள், இந்திய மக்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு தமிழர்களுடைய உடல் கூறும், இந்தியர்களுடைய உடல் கூறும் வெகுவாக மாற ஆரம்பித்தது. ஏனென்றால், நம் உணவிலே இரண்டு வகையான உணவு உண்டு, ஒன்று அமில உணவுகள் மற்றொன்று கார உணவுகள். அமில உணவுகள் என்று நாம் சொல்வது என்னவென்றால்? எந்த உணவில் மாவுப்போருள்கள் மிக அதிகமாக இருக்கிறதோ அவை எல்லாம் அமில உணவுகள். நார்ச்சத்து(ஃபைபர் கன்டன்ட்), புரதம்(ப்ரோடீன் கன்டன்ட்) அதிகமாக இருக்கக் கூடிய உணவுப் பொருள்கள் எல்லாமே கார உணவுகள். அரிசி முழு நேர உணவாக இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் பரவலாக இருக்கக் கூடிய கலாச்சாரம் என்னவென்றால்,காலை வேலையில் இட்லி, தோசை, பொங்கல். மதியம் சாப்பாடு, இரவிலும் சாப்பாடு அல்லது இட்லி, தோசை, பொங்கல் ஆகிவிட்டன. ஆக இதனுடன் இருக்கக் கூடிய காய்கறிகள் என்ன என்று பார்க்கும்பொழுது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்கிறோம். அடுத்து வெண்டைக்காய், முருங்கைக்காய். இதற்கு மேல் எந்த காய்கறிக்குள்ளேயும் போவதில்லை.

இன்றைய உணவுப் பழக்கத்தில் சராசரியாக 10  காய்கறிகள், முழுமையாக அரிசி, கூடுதலாக வட இந்திய ஆதிக்கத்திலிருந்து வந்த சப்பாத்தி (கோதுமை உணவு) , இதை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய உணவுப்பொருள்கள் சங்க காலத்தில் இருந்த வந்த உணவுப் பொருள்கள் என்று பார்த்தோமானால் கிட்டத்தட்ட 3000 வரையில் உணவுப் பொருள்கள் இருக்கிறது. இந்த மூவாயிரம் உணவுப் பொருள்களை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு வீட்டில் களி கிண்டக் கூடிய தன்மை இருக்கிறதா? என்றால் அது கிடையாது. அது ஏன்? ஏனென்றால் அன்றைய கால கட்டத்தில் நல்ல உடல் வன்மைக்கும், உடல் வலுவுக்கும், தமிழர்கள் சாப்பிட்ட உணவு  களி ஆகும். ஆக காலை வேலையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் ஒரு வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி , கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.

ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில்  கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள், இந்தியர்கள் எல்லாருமே எடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று பார்க்கும் போது காலை இட்லி, தோசை ஆகும். இந்த இட்லி, தோசை என்பது அரிசியை புளிக்க வைத்து, அதாவது அரிசியை மாவாக்கி புளிக்கவைத்து, அந்த புளிப்புத்தன்மை  மிகுதியான பின்புதான் இட்லியாகவோ, தோசையாகவோ வார்க்க முடியும். அரிசியை அப்படியே ஆட்டி, இட்லித் தட்டில் வைத்தால் இட்லி வராது, தோசையாகவும் வராது. ஆக அரிசியைப் புளிக்கவைத்து அதாவது புளிப்பு என்றால் சாகடித்தல், அதன் அடிப்படையில் வரும் உணவை இட்லியாகவோ, தோசையாகவோ வார்த்து அதைச் சாப்பிட்டு வேலைக்குப் சென்றோமானால் உடம்பு இன்னும் கூடுதலாக புளிக்க ஆரம்பிக்கிறது. ஆக புளிப்பு உணவுகளை தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ நாம் தொடர்ந்து எடுக்கக் கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறதால் இந்த உடம்பு தன்னுடைய ஊட்டத்திறனை முழுமையாக இழந்து உடலிலும் புளிப்புத் தன்மை மிகுந்து பல்வேறு நோய்கள் வருகிறது.  இட்லி, தோசை என்று இருந்த தமிழ் சமூகம் இன்று வேறு ஒரு உணவை உண்ணும் நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். எப்படி என்றால் உடனடியாக (Instant) வரக்கூடிய சப்பாத்தியையும், பரோட்டாவையும்,  பிரியாணியையும் உட்கொண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.. உலகம் முழுக்க உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் (chemicals) ரசாயனம் இருப்பதாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இவை உலகம் முழுக்க இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் ரசாயனம் மருந்துகள் இருக்கிறது. அந்த மாதிரியான ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடும்பொழுது  தமிழர்களுடைய உணர்வு மழுங்கடிக்கப்படும்.

இதைத்தான் சித்த உணவியல் துறையில் முழுமையாக நாங்கள் சொல்வது என்னவென்றால் உணவு அடிப்படையில் தான் ஒரு மனிதன் உணர்வைப் பெற முடியும். ஆக அந்த உணர்வுதான் சிந்தனையாக மாறும். அந்த சிந்தனைதான் செயல்பாடாக மாறும். அந்த செயல்கள் எல்லாம் சிறப்பான செயலாக இருந்து சமூகத்தை மேன்மைப்படுத்தும் இதுதான் உண்மை. ஒரு அறிஞன் சொல்லியிருப்பான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவனுடைய உணவுப்பழக்கத்தை அழித்தால் போதும், கண்டிப்பாக அந்த இனத்தை அழித்து விடலாம் இதுதான் உண்மை.

தமிழினத்தை, தமிழனுடைய வீரம், மனித நேயம் எல்லாவற்றையுமே முழுமையாக அழிக்கக் கூடிய தன்மையை இன்று பன்னாட்டு  நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் இறங்கி தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பெரும் சந்தையை நிறுவி செயல்பட்டு வருகின்றன. இந்த மனித சந்தை இருக்கக் கூடிய இடத்தில் உலகளாவிய அளவில் உள்ள நிறுவனங்கள் ஒரு வணிகச்சந்தையை நிறுவி விட்டது. இப்பொது வெளிநாடுகளில் (பிரான்சு,கனடா) இருக்கக் கூடிய மனிதர்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் சாப்பிடலாம். ஆனால் அதே தன்மையை இப்போது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து, இங்குள்ள மக்களை நோயாளியாக மாற்றி அவர்களுடைய உணர்வுகளை மழுங்கச்செய்து மருத்துவமனைகளை நிறுவி நம்மிடம் இருக்கக் கூடிய நிதி ஆதாரங்களை முழுமையாக கொள்ளையடிக்கக் கூடிய ஒரு நிலைக்கு உணவின் மூலம் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆக உணவு சார்ந்த விழிப்புணர்வு இன்று கண்டிப்பாக வேண்டும். உணவு விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் விடாது இதை ஒரு போராட்டமாக செய்து கொண்டிருக்கிறோம். உணவு சார்ந்த ஆய்வை நாங்கள் முழுமைப்படுத்தி எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நமக்கு நல்லது. எந்தெந்த உணவைச் சாப்பிடும் பொழுது நீரிழிவு வியாதி கட்டுப்படும்? நீரிழிவு வியாதி இருப்பவர்கள் என்னவெல்லாம் உணவை உண்ண வேண்டும்? ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக் கூடாது? ஒவ்வொரு நோயாளிகளும் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? என்று வெளியிடுகிறோம். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் அடிமைப்பட்டுப் போகக் கூடிய தன்மையை மாற்ற வேண்டும்.

இதயநோய் வந்த பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது ஒரு மருத்துவரிடம் வாழ்நாள் முழுக்க அடிமையாகவே, அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கிற ஒரு காலகட்டம் இன்றைய வளரும் நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உடைக்க வேண்டும், அது உருத்தெரியாமல் போக வேண்டும் என்றால் தனி மனிதனாய் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தன்னுடைய உணவுமுறை, தன்னுடைய பாரம்பரியத்தை, தன்னுடைய கலாச்சாரத்தை தயவு செய்து ஒரு ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் முன்னோர்கள் என்ன உணவு முறையில் சாப்பிட்டார்கள், எப்படி ஆரோக்கியமாக இருந்தார்கள், எப்படி அவர்கள் மட்டும் பல குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆரோக்கியமாக இருந்தார்கள்? எப்படி அவர்களால் மட்டும்  தேவையான கடமைகளை செய்ய முடிந்தது, ஏன் இன்று நம்மால் இயலவில்லை? எப்படி மரபுக் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டன? என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உற்று நோக்கி ஆய்ந்து பார்க்க வேண்டும். அந்த விடயத்திற்கு உறுதுணையாக, உதவியாக எங்களுடைய தமிழர் சித்த உணவியல் மற்றும் இயற்கை மருத்துவர் சங்கம் உணவியல் சார்ந்த விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் திணை, வரகு, குதிரைவாலி, சாமை போன்ற உணவுகளை பழக்கப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அரிசியை கூடிய மட்டும் தவிர்த்து பாரம்பரிய சிறு தானிய உணவுகளையும், பச்சைப் பயிர்கள் , உளுந்து, எள்ளு, கடுகு இவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்பதையெல்லாம் நாங்கள் கொண்டு செல்கிறோம். அன்றைய தமிழர்கள் வாழ்க்கையிலே கடுகோதன்னம் என்ற சாப்பாட்டு முறையே இருந்தது. கடுகோதன்னம் என்றால் கடுகை பிரதானப்படுத்தி அரிசியுடன் சேர்த்து சமைக்கக்கூடிய ஒரு முறை. உளுந்தோதன்னம் என்பது உளுந்தையும், அரிசியையும் வைத்துச் சமைக்கக்கூடிய ஒரு முறை, எள்ளோதன்னம் என்றால் எள்ளையும், அரிசியையும் வைத்து சமைக்கக்கூடிய ஒரு முறை. ஆக இந்த முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம்  இருந்தது.

எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு இவையெல்லாம் இருந்த தமிழ் சமூகத்தில் ஹார்மோனல் பிரச்சனை இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிற தைராய்டு பிரச்சனை  எல்லாவற்றுக்குமே சோறே மருந்தாக மாறியது. ஏன் அப்படி ஒரு  காலகட்டத்தை நாம் உருவாக்கக் கூடாது. இதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்.  இந்த மாதிரியான எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, இதெல்லாம் சாப்பிட்டால் அதன் அடிப்படையில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒழுங்காகத் தோன்றி ஒவ்வொரு தமிழனும் சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார்கள்.  அப்படி இருந்த தமிழர்கள் இன்று உணவுகளால், பன்னாட்டு கம்பெனிகளால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம்முடைய புராதன உணவு முறைகளை, பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒவ்வொருவரும் நினைத்து, மறுபடியும் மீட்டெடுக்க வேண்டிம். ஆக மறைந்துவிட்ட உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தவேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு சித்த உணவியல் துறையில் ஈடுபட்டிருக்கிற என் போன்ற பலரிடம் திணிக்கப்பட்டுள்ளது.  நாங்களே தமிழர்கள் பயன்படுத்திய மூவாயிரம் வகையான உணவுப்பொருள்களை கண்டறிந்துள்ளோம். அந்த மூவாயிரம் வகையான உணவுப் பொருள்களையும் இனிவரும் காலங்களில் (siragu.com)  சிறகு  இணைய இதழில் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

அது அல்லாமல் இன்று பார்த்தீர்களேயானால் இந்தியாவிலே நீரிழிவு நோய் உலகளவில் இந்தியா முதலிடத்திலும், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்திலும், தமிழகம் அளவில் சென்னை முதலிடத்திலும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம்.  ஆக தமிழன் வலுவாக இருந்த தன்னுடைய உடலமைப்பை முழுவதுமாக மாற்றி ஒரு தளர்ந்த உடலுக்கு சொந்தக்காரனாய் தமிழன் மாறியிருப்பதால் மறுபடியும் தமிழனை ஒரு வலுவானவனாய், அன்றைய காலகட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு இளைஞனாய், ஒரு இளவட்டகல்லைத் தூக்கிப் போட்ட இளைஞன் போல் மாற்ற எண்ணுவதால் முதலில்  உணவு முறைகளை மாற்றக் கூடிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம்

அருன் சின்னையா அவர்களின் அலைபேசி எண் 9884076667...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.