22/07/2018

காவல் நிலையத்திலேயே சோதனை? போலி பெண் இன்ஸ்பெக்டர் கைது...


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு பெண் போலீஸ் ஒருவர் வந்தார். அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் தண்டபாணியிடம், ‘நான் சென்னையில் இன்ஸ்பெக்டராக உள்ளேன். ஒரு வழக்கு தொடர்பாக எப்ஐஆர் புத்தகத்தை பார்க்க வேண்டும். வழக்கு புத்தகத்தை கொடுங்கள்’ என கேட்டுள்ளார். ஆனால் பெண் இன்ஸ்பெக்டர் அணிந்திருந்த சீருடையில் பெயர் பேட்ஜ் இல்லை. கால்களில் ஷூ அணியவில்லை. மேலும் அவரது பேச்சில், போலீஸ்காரர் தண்டபாணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர், ‘சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் காத்திருங்கள்’ என்றார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் காவல்நிலையம் வந்து விசாரித்தார். அப்போது அந்த பெண் இன்ஸ்பெக்டர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
அதில் அந்த பெண், தண்டராம்பட்டு அருகே உள்ள சின்னியம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கங்கா(24) என்பதும், இன்ஸ்பெக்டர் என கூறி நடித்ததும் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கங்கா கூறியிருப்பதாவது: எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என சிறு வயதில் இருந்தே ஆசை. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துதேர்வில் வெற்றி பெற்று, உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் 2 மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தேன். இதனால் காவல் துறையில் சேர முடியாமல் போனது. இது எனது உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு தெரிய வந்தால் அவமானம் எனக்கருதினேன். இதனால் ஆரணியில் உள்ள காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்துவிட்டதாக அனைவரிடமும் கூறினேன். தினமும் வீட்டில் இருந்து போலீஸ் உடையணிந்து ெவளியே செல்வேன்.

பணம் தேவைப்படும்போது தனியாக ெசல்லும் ஒரு சில வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை நடத்துவதுபோல், பணம் பெற்றுக்கொள்வேன். அதேபோல் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வேன். அதேபோல் இன்றும் (நேற்று) திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டிற்கு தனியார் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்.
பஸ்சில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க காவல்நிலையம் முன்பாக பஸ்சை நிறுத்தி இறங்கினேன். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று வழக்கு பதிவு புத்தகத்தை பார்ப்பதுபோல் நடித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கங்காவை கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.