22/07/2018

திருச்சியை அதிரவைக்கும் அபாயம் வேகமாக பரவுகிறது புதிய போதை பழக்கம் அடிமைகளாகும் மாணவர்கள், இளைஞர்கள். அதிர்ச்சி ரிப்போர்ட்...


திருச்சி:திருச்சியில் ஒரு புதிய போதை பழக்கம் வேகமாக பரவி வருகிறது. வாலிபர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி வருவது பெற்றோரை வேதனை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் குட்கா, பான்பராக், புகையிலை, ஹேன்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே குட்கா குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகரில் ஏற்கனவே விற்கப்பட்ட கடைகளில் இப்போது வரை போதை பொருள் விற்பனை தங்குதடையின்றி நடந்து வருகிறது.

இந்தநிலையில் புதுவித போதைக்கு திருச்சியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர். அதாவது வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை அனுபவிக்கின்றனர். இந்த போதை பழக்கம் திருச்சியில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது.

திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் வசித்து வரும் கோழிக்கறி கடை தொழிலாளி அஜித்குமார்(20). இவரது நண்பர்கள் தர்மா, அருண். இவர்கள் 2 பேரும் மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை அனுபவித்து வந்தனர். இதை அஜித்குமார் கண்டித்ததால், ஆத்திரமடைந்து வலுக்கட்டாயமாக அவருக்கும் போதை ஊசியை செலுத்தி விட்டனர். இதில் கையில் பாதிப்பு ஏற்பட்டு, அஜித்குமார் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

டாக்டரின் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் போதை மாத்திரை விற்பனை செய்ததாக அரசு மருத்துவமனை எதிரே உள்ள மருந்துக்கடை உரிமையாளர் வசந்தா, பணியாளர்கள் சுரேஷ்பாபு மற்றும் ஒருவர் என 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் என்ஜினீயர் ஒருவருக்கு போதை மாத்திரை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை உறையூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கரூர் பைபாஸ் சாலை பிரிமியர் டவர்ஸ் பகுதியில் வசிக்கும் ராஜகோபால் மகன் திலகன்(25). சிவில் இன்ஜினீயரான  இவர், முன்னணி செல்போன் நிறுவனம் ஒன்றில் விநியோகஸ்தராக பணிபுரிகிறார். இவருக்கு உறையூர் செவந்திபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கவுரிசங்கர்(21) பழக்கமானார். கவுரிசங்கர், போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, அதை ஊசி மூலம் இளைஞர்களுக்கு உடலில் செலுத்தி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திலகனுக்கு உடல் அசதியால் வலி எடுத்துள்ளது. எனவே அதற்கான மாத்திரை வாங்க வேண்டும் என கவுரிசங்கரிடம் கூறி இருக்கிறார். அதற்கு கவுரிசங்கர், நான் சில மாத்திரைகள் வைத்துள்ளேன். அதை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தினாலே சொர்க்கத்துக்கு போவதுபோல இருக்கும். வலி பறந்து போய்விடும் என நைசாக பேசி இருக்கிறார். முதலில் மறுத்த திலகன், பின்னர் அதற்கு சம்மதம் தெரிவித்து, போதை ஊசி போட தொடங்கினார். இந்தநிலையில் திலகனின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்தனர். ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டதுடன், கையில் ஊசி குத்திய வடுக்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உண்மையை சொல், என பெற்றோர் விசாரித்த போது நண்பர் கவுரிசங்கர் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார்.

இந்த பழக்கத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக நான் செய்து வருகிறேன் என்றும் கூறி உள்ளார். இதைக்கேட்டு திலகனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உறையூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து புத்தூரில் நேற்றுமுன்தினம் கவுரிசங்கரை கைது செய்தார்.

மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை அனுபவிக்கும் புதுப்பழக்கம் திருச்சி மாநகரில் வாலிபர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் தொற்றி வருகிறது. இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே பான்பராக், குட்கா விவகாரம் போல் இல்லாமல், இந்த போதை ஊசி விவகாரத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பழக்கம் முற்றாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கேட்ட போது, மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை அனுபவிக்கும் பழக்கம் பெருகி வருவது பற்றி எனது கவனத்துக்கு வந்தது. இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைத்தேன். அந்த தனிப்படை போலீசார் தான் கவுரிசங்கரை கைது செய்தனர். இவரிடம் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாத்திரை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். வேறு யாராவது இவரை போல் மாத்திரை சப்ளை செய்கிறார்களா என கண்காணிக்கவும், பள்ளி, கல்லூரிகள் அருகில் போதை மாத்திரை விற்கப்படுகிறா என கண்காணிக்கவும் தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த போதை பழக்கம் மாநகரில் முற்றிலும் ஒழிக்கப்படும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகள் சப்ளை செய்வது தவறு. அவ்வாறு செய்தால், மருத்துவதுறைக்கு அறிக்கை அனுப்பி மருந்துக்கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாள் முழுவதும் அரை மயக்கம் விலை ரூ.80; விற்பதோ ரூ.350 வரை

போதைக்கு பயன்படுத்தப்படும் 10 மாத்திரை கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ 80. ஆனால், போதைக்கு பயன்படுத்துவோரிடம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

ஒருவேளைக்கு 2 மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துகின்றனர். 1 மணி நேரம் மற்றும் 2 மணி நேரம் இடைவெளியில் மீண்டும் உடலில் ஊசி மூலம் மாத்திரை செலுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு செய்வதால், உடலில் ஏற்பட்டுள்ள வலிகள் பறந்து போவதோடு, உடல் அரை மயக்கத்துக்கு செல்லும். இந்த ஊசியை செலுத்திக்கொண்டவர்கள் நாள் முழுவதும் அரை மயக்கத்திலேயே இருப்பார்கள். அப்படியே சொர்க்கத்தில் இருப்பது போல் உணரலாம் என இந்த பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுவை விட வித்தியாசமான, அதே சமயம் அதிக  நேரம் நீடிக்கக்கூடிய போதை தருவதால் இந்த மாத்திரை போதைக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சப்ளை:
அரசு மருத்துவமனை, உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள சில மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரை சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நபர்கள் மாத்திரைகளை வாங்கி, போனில் தங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மாதிரி முகவர்கள் பலர் உலா வருவதாகவும், இவர்களிடம் ஏராளமானோர் வாடிக்கயைாளர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேறுநபர்கள் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து கடைகளில் கேட்டால், இந்த மாத்திரை தரப்படுவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.