14/07/2018

நீட் டின் நிஜ முகத்தை தோலுரித்துக் காட்டியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை...


தப்பான வினாக்களுக்காக தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க ஆணை.

இதற்கும் சிபிஎஸ்இ மேல்முறையீடு போகையில், அதற்கு முடிவுகட்டி, புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறச் செய்யுமா தமிழக அரசு?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி..

இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 6ந் தேதி நடந்தது; தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் எழுதினர்; இதில் தமிழில் தேர்வு எழுதியவர்கள் 24,720 பேர்.

ஆனால் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தப்பாக இருந்தன.

இதனால் அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதோடு +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது; ”தமிழில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் வழங்குவதோடு, இரண்டு வாரங்களுக்குள் புதிய தர வரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

முதலில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தபோதே சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டு, முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி 3,500 பேருக்கு மருத்துவ சீட் வழங்கிவிட்டது. அதில் கடந்த ஆண்டு தேர்வான 96 மாணவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான சீட் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற வேண்டும். அதுதான் முறை!
ஆனால் சிபிஎஸ்இ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்கிறது.

சிபிஎஸ்இ தப்பு செய்தது; அது நிரூபிக்கப்பட்டும்விட்டது; ஆனால் அதனை ஏற்காமல் மேல்முறையீடு என்பது, திட்டமிட்டே அது தப்பு செய்ததாகிறது.

எனவே சிபிஎஸ்இயின் இந்த அடாவடிக்கு மரண அடியே கொடுத்து முடிவுகட்ட வேண்டும்; அதற்கான நடவடிக்கையில் இறங்குவதுடன், நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிடவைத்து அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற ஆவன செய்ய வேண்டும் தமிழக அரசு.

நீட் தேர்வே கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலை; அதே நேரம் நடந்துவிட்ட தப்பை நிவர்த்தி செய்யாமல் எப்படி?

இதை ஏன் சொல்கிறோம் என்றால்; இப்போது, இந்த நிலையிலும் கூட, தமிழக நலவாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "சிபிஎஸ்இயின் முடிவைப் பொறுத்து கலந்தாய்வு நடைபெறும்” என்கிறார்.

இது என்ன பேச்சு? இரண்டுங்கெட்டான் பேச்சல்லவா? தமிழக அமைச்சர்கள் யாரும் இது பற்றிப் பேசுவதற்கு முன் முந்திரிக்கொட்டைத்தனமாக, அதுவும் சிபிஎஸ்இக்கு இசைவாகப் பேசுகிறாரே?

தமிழக மாணவர் நலனில் அக்கறை இல்லாத இதுபோன்ற பேச்சுக்களை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

”நீட்”டின் நிஜ முகத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனது தீர்ப்பின் மூலம் தோலுரித்துக் காட்டிய பிறகும் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய மதிப்பெண் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிடவைத்து அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெற ஆவன செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

அதே சமயம், மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பிய நீட்-விலக்கு மசோதாக்கள் இரண்டுக்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுதான் ஒரே தீர்வாகும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.