14/07/2018

காளி என்னும் தொழில்நுட்பம்...


பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ......
.
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்
பொற்றொடி மாதர் தவம் என்னைகொல்லோ?

சிலம்பின் மதுரைக்காண்டம் வேட்டுவ வரியில் சாலினி என்னும் வேடர் குலப்பெண்ணொருத்தி கண்ணகியின் தோற்றத்தைக் கண்டு வியந்து பாடுவதாக வரும் இப்பாடலில், பாய்கலைப் பாவை என்னும் பெயரானது கொற்றவைத் தெய்வத்தைக் குறித்துவருவதைக் காணலாம்.

இங்கு பாயும்கலை என்பது ஒன்றின் மடங்குகளைக் குறிக்கும். ஒட்டுமொத்த உயிர்செல்களின் வளர்ச்சியும் அவ்வாறே 1 – 2 – 4 – 8  எனப் பெருகும். இதன் தொகுப்பை அணி (Parade) என்ற சொல்லைக் கொண்டும் அறியலாம்.

ஆக ஓர் உயிர்ச்செல்லானது இரண்டின் மடங்குகளாய் பல்கிப்பெருகுவதையே நாம் வளர்ச்சி (Growth) என்கிறோம்.

இயற்கை ஓர் ஒழுங்குடைய இயக்கத்தை தன்னுள் கொண்டது. அவ்வியக்கம் மாந்தரின் (8) எண்சாண் உடலிற்கும் அப்படியே பொருந்தும்.

அவ்வியற்கை மாறுபடின் உடலும் கேடுறும். ஒட்டுமொத்த இயற்கையின் செயல்திட்டத்தையும் எண்சாண் மாந்த உடலோடு பொருந்தச் செய்யும் ஒரு கலையே மெய்யியலாகும்.

பழந்தமிழர்கள் இக்கலையில் உச்சத்தை தொட்டிருந்தனர். இயற்கையில் நிகழும் வளர்ச்சியை (Growth) அவர்கள் பெண்ணின் உடல்இயக்கத்தோடு பொருந்தச் செய்தனர்.

அதன்படி பூப்படைந்த மாதரின் கருமுட்டைச் சுழற்ச்சியானது நிலவின் 30 நாள் சுழற்ச்சியோடு அப்படியே பொருந்தி நிற்பதால் “மாதம்” என்னும் பெயரையே நிலவின் அச்சுழற்சிக்கும் சூட்டினர்.

3 நாட்களுக்கு நிலைபெறும் மாதஒழுக்கின் தீட்டானது 3 –ம் நாள் இறுதியில் விலகிடும். இம்மூன்றாம் நாள் நிகழ்வையே மூன்றாம்பிறை என்னும் நன்மையின் பிறப்பாக கருதி அந்நாளையே மாதப்பிறப்பின் முதல் நாளாக கணக்கிட்டனர்.

 அம்மாவாசை நாளும், பௌர்ணமி நாளும் பெண்ணின் கருமுட்டையின் முழு சுழற்சியைக் குறிப்பதாலேயே இந்நாட்கள் காளிக்கு உகந்த நாட்களாகக் கொள்ளப்பட்டது.

ஆண் (முருகன்) என்பவன் (பிணைப்பு) கட்டுமானத்தைக் குறிக்கும் 6 –ம் எண்ணின் தொழில்நுட்பம் என்பதாலும் இயற்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் 8 –ம் எண்ணின் செயல்திட்டமானது பெண்ணின் (மெய்) உடலோடு மட்டுமே பொருந்துவதாலும் ஓர் குழந்தை உருப்பெற்று வளர அப்பெண்ணின் வயிற்றையே (Medium) இயற்கை தேர்வு செய்கிறது.

பூமிக்கு வெளியே இருக்கும் வித்து முளைக்காது. அதுவே மண்ணிற்குள் சென்றாலும், பெண்ணிற்குள் சென்றாலும் முளைத்துவிடும்.

எனவே தான் பெண்ணினத்தை பழந்தமிழர்கள் விளைநிலத்தோடு ஒப்பிட்டனர். பூமியை ஒரு தாய் (காளி) என்றனர்.

தமிழர் மெய்யியலின் விதிப்பிடி உயிர்தோன்றுதலுக்கு பெண் பாலினத்தையே இயற்கை முதன்முதலில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

அதன் பின்னரே அப்பெண்ணின் (Pro Model) உருவத்தை ஒத்த ஆண் என்னும் செயல்திட்டத்தை இயற்கை படைத்திருக்க வேண்டும்.

 எவ்வாறெனில், மார்பகம் உட்பட பெண்ணின் எல்லா உடற்கூறுகளும் ஆணுக்கும் அப்படியே இருக்கும்.

ஆனால் ஆணின் விதைப்பை மட்டும் உடலுக்குள் பொருந்தாமல் பெண்ணின் செயல்திட்டத்தில் வெளியில் சேர்க்கப்பட்டது போல இருக்கும்.

பருவம் (வயது) என்பது முருகனின் ஒரு செயல்திட்டமாகும். மேலும் 6 –ம் எண்ணே ஆணின் நுட்பமாதலால் காலத்தைக் குறிக்கும் அத்துணை அளவையும் 6 –ன் மடங்குகளாகவே தமிழர்கள் குறித்தனர்.

60 நொடிகள் கொண்டது ஒரு நிமிடம்.
24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை.
60 நாழிகை கொண்டது ஒரு நாள்.
6 நாட்களைக் கொண்டது ஒரு கிழமை (வாரம்)
30 நாட்களைக் கொண்டது ஒரு மாதம்.
12 மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு.
360 நாட்களே ஓர் ஆண்டு.

இக்கணக்கீடுகளைக் கொண்டே வட்டத்திற்கும் 360 பாகைகளைப் பொருத்தினர்.

இதில் ஒரு முழு பருவ சுழற்சியைக் குறிக்கும் “ஆண்டு” என்னும் சொல் ஆண் என்ற சொல்லிலிருந்தே பெறப்பட்டது.

சங்க இலக்கியங்களில் பெண் என்பதைக் குறிக்கும் பெண்டு என்னும் சொல் பல இடங்களில் வருவதைக் காணலாம்.
வனைநல முடையளோ மகிழ்நநின்பெண்டே (ஐங்குறு. 57).

“மாதர்” என்னும் சொல் தமிழில் “மாதம்” என்றும் கிரேக்கத்தில் Month என்றும் திரிந்துள்ளதைப் போல “ஆண்” என்னும் சொல்லே “ஆண்டு” என்றும். கிரேக்கத்தில் Ann, Annum என்றும் திரிந்துள்ளது.

பொதுவாக விலங்குகளின் ஆண் பாலினத்தைக் குறிக்கும் ஏறு, ஏர், எருது ,என்னும் சொற்களே கிரேக்கத்தில் “Year” என்று மருவியுள்ளது. ஆங்கில அகராதியில் “Year” என்பதன் வேர்ச்சொல் “Yere, Yer” என்றே உள்ளது.
“எருதே யிளைய நுகமுண ராவே” – புறநா. 102

“ஏர்” என்ற சொல் கலப்பையைக் குறிக்கும் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஏர் என்பதன் முதல்நிலைப் பொருள் “காளை” அல்லது “ஆணினம்”  என்பதாகும்.

பொதுவாக ஆண் இனமே இயற்கையின் அழகுத் தேர்வாகும். ஆண் (முருகன்) அழகானவன் என்பதால் அந்த ஆணைக்குறிக்கும் “ஏர்” என்பதற்கும் அழகு என்றே பொருள் காண்பர்.

ஆக, “ஏர்” என்னும் சொல் முதலில் ஆணைக் குறித்து பின்னர் ஆணின் பண்பாகிய அழகைக் குறித்து வழங்கலாயிற்று என்பதே உண்மை.

ஆண் (முருகன்) என்பவனே ஆண்டுருவாக்கம் செய்தவன் ஆகையால் அவனே “ஆண்டை” என்றும் “ஆண்டவன்” என்றும் அழைக்கப்பட்டான்.

 முருகனின் இந்த செயல்திட்டத்தை கட்டமைப்பதையே “ஆண்மை” “ஆள்மை” “ஆளுமை” “ஆட்சி” என்றெல்லாம் பழந்தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். தமிழர் அரசுருவாக்கத்தின் தொழில் நுட்பத்தினை அடுத்தடுத்த தலைமுறையினர் அறியச் செய்யவே ஆண்டுத் தொடக்கத்தில் ஏறுதழுவலை நடத்தினர்.

முற்காலத்தில் உலகின் பல்வேறு இனங்களும் “சமயம்” என்னும் பெயரில் ஓரினச் சேர்க்கை, சங்கிலித் தொடர் புணர்ச்சி, ஆண்குறி வழிபாடு போன்ற கேடுகெட்டச் செயல்களைச் செய்து வந்த வேளையில் தமிழினம் மட்டுமே அறம், கற்பு போன்ற உயரிய கோட்பாடுகளை தம் சமயத்துக்குள் புகுத்தியும் கடைபிடித்தும் வந்தது.

மரணத்திற்குப் பின்னர் சொர்க்கமும் நரகமும் உண்டு என்பது போன்ற மூடத்தனங்களை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கவில்லை.

மாறாக அவர்கள் மரணத்தை “இயற்கை எய்துதல்” என்னும் சொல்லைக் கொண்டே அறிந்தனர். இயற்கையின் ஆற்றல்களால் தோன்றும் உயிர்கள் மீண்டும் அவ்வியற்கைக்கே திரும்பும் என்னும் பழந்தமிழர்களின் “இயற்கை” பற்றிய இப்புரிதல்கள் வியப்பிலும் வியப்பாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.