21/10/2018

சித்தராவது எப்படி - 17...


அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்...

தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை.. கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்..

தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்..

ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்..

இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை..

காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை..

நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்...

நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்..

எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்..

நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை..

பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே....

காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது..

நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது..

ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது...

அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்...

பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்...

அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..

நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு, அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்..

கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்றே சொல்லும்..

இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்..

பின் கார் சம்பந்தப் பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்...

இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்.....

ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவு பட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..

எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்...

இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்...

இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்..

வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்..

அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்..

அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது...

மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..

அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?

நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது..

காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே... எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது..

நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்...

முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்; நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது...

நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது...

மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.