நாடு முழுவதும் நர்சரி பள்ளிகளில் மழலையர் தூங்குவதற்காக 2 மணி நேரம் ஒதுக்கி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் வகுப்புக்கு முந்தைய நர்சரி வகுப்புகளான கேஜி வகுப்புகளில் ஒரே மாதிரி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக என்சிஇஆர்டி என்ற தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள பாடத்திட்டத்தை பின்பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறையும், புதிய பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்சிஇஆர்டி மூலம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தில் பிரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுத்தர வேண்டும் என்றும், எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்தும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் கே.ஜி குழந்தைகளுக்கு வகுப்புகள் நடக்கும் நேரம் குறித்தும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மதியம் 12.30 மணிக்கு மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும்.
தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு தூங்குவதற்கான நேரமாக ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பள்ளியிலேயே குழந்தைகளை 2 மணி நேரம் தூங்க வைத்துவிட்டு, அதன் பிறகு ஒரு மணி நேரம் வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இப்புதிய நடைமுறையை தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் நிறைவேற்றுமா என்பது சந்தேகம் என்கின்றனர் கல்வியாளர்கள். ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் மழலையர் பள்ளிகளுக்கு இதுபோன்ற பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதை தனியார் ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.