24/04/2017

அமெரிக்கா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுமா.?


அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகமானது, கலை, அறிவியல், மருத்துவம் என பல்வேறு துறைகளில் ஆய்வுகளை நடத்தும் உலகின் தலைசிறந்த பல்கலை கழகங்களில் ஒன்று.

குறிப்பாக இங்கிருந்து வெளியாகும் மொழிசார் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானது.

அத்தகைய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இடம் ஒரு சாத்தியமா?

ஹார்வர்ட் பல்கலைக்கழத்தின் தெற்காசிய கல்வித் துறை (http://sas.fas.harvard.edu/) பிரிவானது : சங்கத் தமிழ் இருக்கை பிரிவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், சங்கத்தமிழ் இலக்கியம் முதல் சமகால தமிழ் இலக்கியம் வரை ஆய்வு செய்வதற்கும், உலக அரங்கில் வெளியிடப்படுவதற்குமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

2,500 ஆண்டு காலமாக பல உருமாற்றங்களுக்கு பிறகும் இன்றளவுக்கும் பயன்பாட்டில் இருக்கும் உலகின் தொன்மையான ஏழு மொழிகளில் ஒன்று தமிழ் (மற்றவை - சீனம், பெர்சியன், ஹீப்ரு, கிரீக், லத்தீன், சமஸ்கிருதம்). உலக மக்கள் தொகையில் 8 கோடிக்கும் அதிக மக்களின் பயன்பாட்டில் இருக்கும் 20- வது மொழி தமிழ்மொழி. கலாசாரம், பண்பாடு, மனிதகுல நாகரிக வளர்ச்சி மாற்றம் போன்றவற்றை இலக்கியம் வழியே கடத்தி வந்த மொழியின் தொன்மையை மிகச் சிறந்த பல்கலைக்கழகம் வழியாக உலக அளவில் பறைசாற்ற சிறந்ததொரு வாய்ப்பு உருவாகியுள்ளது .

மருத்துவர்கள் திரு.சம்மந்தம், திரு.ஜானகிராமன் மற்றும் திருமதி.வைதேகி ஹெர்பர்ட் ஆகியோரின் சீரிய முயற்சி காரணமாக ஜூலை - 2015ம் ஆண்டு ஹார்வர்ட் தமிழ் இருக்கை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி திரட்டும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால் 40 கோடி ரூபாய். இதில், சம்மந்தம் மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தலா 5 கோடி ரூபாய்களை அளித்துள்ளனர். மீதமிருக்கும் தொகையை பெற உலகெங்கும் உள்ள பல தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக www.harvardtamilchair.com என்ற இணையம் மூலமாகவும், மற்றும் பல நிகழ்ச்சிகள் மூலமாகவும் நிதி திரட்டி வருகின்றனர். தற்போது வரை 2.13 மில்லியன் டாலர்கள் மட்டுமே தொகை பெறப்பட்டுள்ளது. மொத்த தொகையை செலுத்த இன்னும் 432 நாட்கள் மட்டுமே நமக்கு கால அவகாசம் உள்ளது.

இது தொடர்பாக மேலும் தகவல்பெறும் வகையில் சம்மந்தம் அவர்களை மின்னஞ்சல் வாயிலாக நாங்கள் தொடர்பு கொண்டோம். நமது சகோதர மொழிகளான சமஸ்கிருதம், பெங்காலி மொழிகள் இங்கு பலகாலமாக கற்பிக்கப்படும் நிலையில், தமிழுக்கான இருக்கை என்பது அவசியமான ஒன்றாகும். மேற்கண்ட தொகை முழுமையாக பெறப்பட்டு இருக்கை உறுதியாகும் பட்சத்தில் உலகமெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் தமிழ் மொழி கற்கவும், ஆய்வு நடத்தவும் நிரந்தர களம் உருவாகும் என சம்மந்தம் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

உலகின் தொன்மை மொழிகளின் ஒன்றாகவும், இன்றைய இந்திய மொழிகளில் மூத்ததாகவும் கருதப்படக்கூடிய நமது மொழியின் தொன்மையை பேணும் வகையில் தமிழக அரசு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கும் பணியில் நேரடியாக தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்பதே எம்போன்ற தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

நிதி அளிக்க விரும்பும் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தொகையை செலுத்தலாம். உங்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் நமக்கான வாய்ப்பை உறுதியாக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.