17/04/2017

மாவீரன் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று...


இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.  இவர் இயர் பெயர் தீர்த்தகிரி சர்க்கரை.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார்.

அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

வெள்ளையர்கள் ஆதிக்கம் அதிகரித்த போது அதை தடுக்க நினைத்த தீரன் சின்னமலை எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் வெள்ளையர்களை எதிர்க்க மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுடன் கைகோர்த்து திப்புவின் பல வெற்றிகளில் பங்கு கொண்டார்.

சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூர்ப் போரில் 1799-இல் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. அந்நேரம் சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர்.

கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.