23/09/2017

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்...


விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது எலிகள் தான்.

வீட்டிலும், வயலிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் எலிகள் புகுந்து நாசத்தை விளைவிக்கின்றன.

உயிரினங்களில் மிகுந்த புத்திக்கூர்மையும், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வதிலும் எலிகள் தனித்திறன் வாய்ந்தவை.

ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன.

இவ்வாறு அதிக சேதாரத்தை உண்டு பண்ணும் எலிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

வரப்பு வெட்டி அழித்தல்...

நெல் அறுவடை முடிந்த ஒரு வாரத்திற்குள் வரப்பில் உள்ள ஈரத்தை கொண்டு வரப்புகளை வெட்டி எலிகளை அவற்றின் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம்.

விஷம் வைத்து அழித்தல்...

எலிகள் சந்தேகப் பிராணிகள். தனக்கு வரும் ஆபத்தை எளிதில் கணிக்க வல்லவை. கூச்ச சுபாவம் உடையவை. தனக்கான உணவுப் பொருளில் திடீர் மாறுதல்களை கண்டால் அவற்றை தவிர்க்க கூடியவை. இது போன்ற நிலையில் விஷத்தை பயன்படுத்தும் முன்பாக அவற்றுக்கு அரிசிப்பொறி, கருவாடு, வதக்கிய வெங்காயம் போன்றவற்றை எலி நடமாடும் இடங்களில் அவ்வப்போது வைத்து பழகி வரவேண்டும். பிறகு இந்த உணவில், அதாவது 49 பங்கு உணவுப் பொருளுடன் 1 பங்கு சிங்க் பாஸ்பைடு என்ற அளவில் விஷ உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருளுடன் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 இடங்களுக்கு குறையாமல் எலி நடமாட்டமுள்ள இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொட்டாச்சியில் 10 கிராம் என்ற அளவில் விஷ உணவை வைக்க வேண்டும். இது போல 15 நாட்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை வைத்தால் எலிகள் மடிந்து போகும்.

கிட்டி வைத்து பிடித்தல்...

தஞ்சாவூர் கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் ஏக்கருக்கு 20 எண்களை நிலத்தில் வைக்கவும். நிலத்தில் ஓர் அங்குலம் தண்ணீர் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கிட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்டிகோயாகுலண்ட் முறை
இது ஒரு விஷ மருந்து முறையாகும்.

இதனை 1 பங்கு எடுத்துக் கொண்டு, எலி விரும்பி உண்ணும் சோளம், கம்பு மாவுகளை 19 பங்கு என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து 100 கிராம் அளவில் எடுத்து ஒரு தட்டில் வைத்து எலி நடமாடும் இடங்களிலும், மறைவான இடங்களிலும் வைத்து விட வேண்டும். ஒரு வாரம் அளவுக்கு இதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். பின்னர் 1 பங்கு மருந்தை 19 பங்கு நீருடன் கலந்து குடிநீராக வைத்து எலிகளை குடிக்க வைத்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

இது தவிர ஆங்கில டி வடிவ எழுத்திலான நீள கம்புகளை நட்டு வைத்து ஆந்தைகளை கவருவதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

தகவல்: ப.ராமநாதன், வேளாண்மை துணை இயக்குநர், நீர்மேலாண்மை பயிற்சி நிலையம், விநாயகபுரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.