23/09/2017

சாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய பொடி வகைகளைப் பார்க்கலாம்...


முதலில் பருப்புப் பொடி:

இது ஆந்திராவில் தினப்படி உணவில் இருக்கும். இது பலவிதங்களில் செய்யப் படுகிறது.

பருப்புப்பொடி 1:

இந்த முறை செலவே இல்லாத ஒன்று. ஆயில் restriction உள்ளவர்களுக்கு ஏற்றது. ஒரு கப் துவரம்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சூடாக இருக்கும் இந்தப் பருப்பில் ஒரு ஸ்பூன் பெருங்காயப் பொடி, தேவையான உப்பு, (நான் உப்புக்கு பதில் இந்துப்பு என்று நாட்டு மருந்து கடையில் கிடைப்பதை சேர்ப்பேன்) ரெடிமேட் காரப்பொடி தேவையானது சேர்த்து நைசாக பொடிக்க வேண்டும். அவ்வளவுதான். கட்டை மிளகாய்ப் பொடி வேண்டாம் என்றால் தேவையான வர மிளகாயை சிவக்க வறுத்து சேர்க்கலாம்.

சாப்பிடும் விதம் : சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். நெய்யும் நல்லெண்ணையும் சமமாக சேர்ப்பது இன்னும் சுவையானது.

பருப்புப்பொடி 2:

துவரம்பருப்பு ரெண்டு பங்கு என்றால் கடலைப்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு வேண்டும். (நான் பங்கு என்றது அவரவர் தேவைக்கு ஏற்ற அளவில் எடுக்கவே).

மூன்று பருப்புகளையும் வாணலியில் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கட்டிப் பெருங்காயம் எடுத்து அதையும் நன்றாகப் பொரியும்படி வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே தேவையான மிளகும் கல்லுப்பும் சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்துவிட்டு எல்லாவற்றையும் பொடிக்கவும். இதிலும் எண்ணெய் இல்லை. சாப்பிடும் விதம் மேலே சொன்ன மாதிரிதான்.

பருப்புப்பொடி 3:

கடலைப்பருப்பு மட்டும் அரை கப் எடுத்து மேலே சொன்ன படி எண்ணெய் இல்லாமலோ அல்லது ஒரேயொரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டோ வாசனை வரும் வரை சிவக்க வறுத்து, தேவையான மிளகாய் பெருங்காயம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே கால் கப் பொட்டுக்கடலையை பிரட்டி உப்புடன் அரைக்கலாம். இதில் பொட்டுக்கடலை சரி சமமாக சேர்ப்பதும் உண்டு. எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது, (எங்கள் வீட்டில் இதை ஏதோ அமிர்தம் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள்.).

பருப்புப்பொடி 4:

வாணலியில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு 2 பங்கு துவரம்பருப்பு, 3 பங்கு கடலைப்பருப்பு, தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து வாணலியில் உள்ள அந்த எண்ணைப் பசையிலேயே தேவையான மிளகாய், கொஞ்சம் மிளகு ( இது ஒரு வாசனைக்குத்தான்), ஒரு கட்டி பெருங்காயம் சேர்த்து வறுத்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு 2 பங்கு பொட்டுக்கடலையும் போட்டு வறுக்கவும். தேவையான உப்புடன் அரைத்து உபயோகிக்கலாம்.

இந்த வகையில் அரைக்கும் பொடி இட்லி தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரொம்பவே கொஞ்சம் எண்ணைதான் உள்ளது என்பதால் டயட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.